வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சினால் இது வரை காலமும் வெளியீடு செய்யப்பட்ட புத்தகங்கள் இரண்டு தினங்கள் கண்காட்சிக்காக நேற்றைய தினம் (26.10.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலக மணி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சியானது மேலதிக மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் பாடசாலை அதிபர்கள், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சபையினர் போன்றவர்களின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமான குறித்த கண்காட்சியினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இன்றையதினம் இரண்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்ற குறித்த புத்தக கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் என பலரும் பார்வையிட்டு புத்தகங்களையும் வாங்கி சென்றிருந்தார்கள். புத்தக கண்காட்சி இரண்டு பிரிவாகவும் விற்பனை ஒரு பிரிவாகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் அருகி வரும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும், அறநெறிக்கு செல்லும் மாணவர்களின் தொகையை அதிகரித்து சமூகத்தில் ஒழுக்க விழுமியங்களை கட்டியெழுப்புவது என்ற நோக்கிலும் குறித்த கண்காட்சி இந்து கலாசார திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் சிவானந்தம் மோகனதாஸ் தெரிவித்தார்.














