நவம்பர் 20 மீண்டும் மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்றையதினம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ அவர்கள் சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுதொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.
காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.
ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.