கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் ஒன்பதாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் பிற்பகலுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டு கட்டமாக இடம்பெற்றிருந்தது. முதல் கட்டம் 11 நாட்களும் இரண்டாம் கட்டம் ஒன்பது நாட்களுமாக மொத்தம் இருபது நாட்கள் நடைபெற்றன.
இன்றையதினம் இரண்டாம் கட்ட அகழ்வு பணியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் அகழப்பட்ட நிலையில் கடந்த தினங்களில் நடைபெற்ற ஸ்கான் பரிசோதனை மூலம் குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் அகழ்வு பணியானது எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெற திட்டமிட பட்டிருக்கின்றது. அத்தோடு இன்றுவரை மொத்தமாக 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் தமிழீழ விடுதலை புலிகளுடைய ஆண், பெண் போராளிகளுடைய வித்துடல்கள் என நம்பப்படுகின்றது.
அத்தோடு இப்பிரதேசம் 1984 ஆம் ஆண்டு இருணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்கு இருந்த பிரதேசமாக காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இவ் வீதி இருக்காத நிலையில் மக்கள் 2012 ஆம் ஆண்டு குடியேறியதன் பிற்பாடு வீதி அகன்று செப்பனிடப்பட்டுள்ளது.
ஆகவே இப் புதைகுழி 2012 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திற்குரிய புதைகுழியாக இருக்கின்றது. அத்தோடு அடுத்தகட்ட அகழ்ழுபணிக்கு தேவையான நிதி வசதிகள் அதற்கான பாதீடுகளை தயார்செய்து நீதிமன்றில் தாக்கல் செய்ய கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வழக்கு இடம்பெறவுள்ளது. அத்தோடு பல சான்று பொருட்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
உடலங்கள் கொண்டுவந்து போடப்பட்டதாக கூறப்படும் 3 மீற்றர் அகலம் , 14 மீற்றர் நீளம் கொண்ட குழிக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வீதிப்பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு 1.5 மீற்றர் ஆழத்திற்கு அகழப்படலாம் என கூறப்படுகின்றது.
இதுவரை எந்தவித அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் பேராசிரியர் ராஜ் சோமதேவ இடைக்கால அறிக்கையினை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முதல் சமர்ப்பிப்பதாகவும் நீதிமன்றில் கூறப்பட்டது.
நிதி வழங்கலில் பிரச்சினைகள் இருப்பதாக அறிகின்றோம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று கலந்துரையாடபட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு கட்டளையும் வழங்கப்பட்டிருக்கின்றது. அரசாங்க அதிபரின் காரியாலயத்திலிருந்து இந் நடவடிக்கைக்காக உள்வாங்கப்பட்டு இது தொடர்பாக நிவர்த்தி செய்யப்படுவதாக கூறப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்தார்.