பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை
நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலக செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (01.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாவீரர் வாரமும் மாவீரர் நாளும் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய நிகழ்வாகும். அதனை வடக்கிலும்,கிழக்கிலும்,புலம்பெ யர் நாடுகளிலும் வேதனைக்கு மத்தியிலும் அந்நாட்களில் எழுச்சியுடன் ஒன்று கூடி உயிர் கொடையாளர்களுக்கு சுடர் ஏற்றி நினைவஞ்சலி செய்வதோடு நின்று விடாது தமிழர்களின் தேசத்திற்காக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க திடசங்கட்பம் கொள்ளும் நாளும் இதுவாகும்.
இதனை பாரிய இனப்படுகொலைகளோடு அழிக்க நினைத்தவர்களுக்கு அது தோல்வியே என தற்போது உணர்வதால் இந்நிகழ்வுக்கு எதிரான செயற்பாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு வடிவங்களில் கூட்டாக அழிப்பு வேலைகளை நடைமுறைப்படுத்த எதிர் சக்திகள் திட்டமிட்டுள்ளன என்பதை இவ்வருட சம்பவங்கள் உணர்த்துகின்றன.
இதற்கு வடகிழக்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டாக தமது அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். தற்போது நாம் முகம் கொடுக்கும் சிக்கல்களை சிவப்பு சமிக்ஞையாக ஏற்காவிடின் பாரிய விலை கொடுக்கும் நிலை உருவாகும்.
தமிழர் தேசத்திற்கும், தேசியத்திற்கும் எதிரான சக்திகளிடம் சோரம் போன தமிழர் முகமூடி தரித்த சிலர் மேதகு தலைவரின் மக்களென ஒரு போலியை மேடையேற்றி தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. “தலைவர் இருக்கிறார்”. “அவர் வருவார்”…”வருவார்…” என கூறி இன்னும் ஒரு தலைமைத்துவம் உருவாகக்கூடாது என நினைத்தவர்கள் தமது முயற்சியின் அடுத்த கட்டமா போலி முகத்தை மேடையேற்றி அவமானப்பட்டுள்ளனர்.இத்தோடு அவர்கள் நின்றுவிடப் போவதில்லை.
இன்னும் ஒரு பக்கம் சேனையின் பெயரால் தாயகத்தில் இயங்கும் அமைப்பு ஒன்று மாவீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை அவமானப்படுத்தும் வண்ணம் முகநூலில் பதிவிட்டுள்ளது. அதன் மூலம் புதிய தலைமுறையினரின் மூளையை சலவை செய்து அரசியலில் இருந்து தூரமாக்க முயற்சிக்கின்றனர். உயிர் தியாக வரலாற்றை எம் காலத்திலேயே குழி தோண்டி புதைக்கவும் வழி செய்கின்றனர்.
அடுத்ததாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாததும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதுமான 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க கூட்டமாக காவடி தூக்கி கொடி பிடிக்க இன்னும் ஒரு கூட்டம் பகிரங்கமாகவே எழுந்து நிற்கின்றது. இதனையும் சதியாகவே கொள்ளல் வேண்டும். இவர்கள் தமிழ் மக்கள் பேரவை இயங்கிய காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என ஆவணம் தயாரித்து பௌத்த மகா சங்கத்திடம் தூக்கி சென்றதை மறந்துவிட்டனர் போலும். இவர்களே தமிழ் மக்கள் பேரவைக்கு வீழ்ச்சிக்கும் காரணமானவர்கள் என்பது இப்போது புலனாகின்றது.
இது இவ்வாறு இருக்க இலங்கை அரசு மீண்டும் புலி உருவாக்கம் என்பதை கையில் எடுத்து இவ்வருடம் மாவீரர் தின நிகழ்வோடு பலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்கின்றது. மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக மேலும் பலருக்கு வலை வீசிக் கொண்டிருக்கின்றனர். இதுவும் இளைஞர் மத்தியில் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பயத்தை உருவாக்கும் செயலாகும். நினைவேந்தல் போன்ற நிகழ்வில் இருந்து சுயமாகவே விலகச் செய்வதற்கான வேலை திட்டங்களில் இதுவும் ஒன்று எனக் கூறலாம்.
2009ல் விடுதலை இயக்கத்தை அழிப்பதாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை படுகொலை செய்த இலங்கை அரசு தமிழர்களை அரசியல் ரீதியாக படுகொலை செய்வதற்கு பல்வேறு சதிகளை கூட்டு சேர்ந்து தீவிரபடுத்தி உள்ள காலகட்டத்தில் வாழ்கிறோம். இதற்கு எம்மவர்களும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சூழ்ச்சி செய்வதும் பயணிப்பதும் நீண்ட நாட்களாக தொடர்கின்றது.
இத்தகையவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதுடன் எமது அடுத்த சந்ததியினரை இச் சூழ்ச்சி வலை நின்று பாதுகாத்து அரசியல் அறம் பிறழாது வாழ்வு போராட்டங்களை பாதுகாப்போடு முன்னெடுக்க வழிகாட்டும் மிகப்பெரிய பொறுப்பு விழிப்புடன் செயல்படும் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது. சுயநல அரசியலையும், சுகபோக அரசியலையும், காவடி தூக்கும் அரசியலையும் புறந்தள்ளி அரசியல் தலைமைத்துவங்கள் கூட்டாக செயல்பட வேண்டிய காலம் இதுவாகும். அன்று உயிருக்கு பயந்து ஒரு தலைமையின் கீழ் நாங்கள் செயல்படுவோம் என போலி முகத்தோடு உறுதி பூண்ட அரசியல் தலைமைத்துவங்கள் தடம் புரண்டுள்ள இன்றைய நிலையில் தியாகத்தோடு தமிழர்களின் தேசிய அரசியலை முன்னகர்த்த அறம் சார்ந்த அரசியல் செயற்பாட்டை ராஜதந்திரத்தோடு முன்னெடுக்க அரசியல் தலைமைகளுக்கு சமூக அமைப்புக்கள் அனைத்தும் கூட்டாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.