முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் (Video)

கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் சட்டத்தரணி சி.தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில்,

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திலே சுண்டிக்குளம் பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக வன ஜீவராசிகள் திணைக்களம் கிட்டதட்ட 130 நபர்களுக்கு எதிராக வழக்குகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே தாக்கல் செய்துள்ளார்கள்.

குறித்த வழக்கிலே அத்துமீறி குறித்த மக்கள் குடியிருந்ததாகவும், தாவரங்களை அழித்ததாகவும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். சுண்டிக்குள பிரதேசத்தில் இருந்து ஆறு கிலோ மீற்றர் தூர தொலைவில் இருக்கும் மக்களுக்கு எதிராகவும், இறந்த மக்களுக்கு எதிராகவும், ஒரு நபருக்கு எதிராக மூன்று நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், நில அளவை திணைக்களத்தினர் சரியான வரைபடங்களையோ, எந்த காலப்பகுதியில் அது சரணாலயமாக இருந்தது என்பதற்கான எந்த வித தகவல்களும் இல்லாத நிலையில் போலியான விசாரணையை நடாத்தி இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்கள்.

இன்றையதினம் நிதிமன்றிலே இவ்வழக்கானது அடிப்படை ஏதுகள் அற்ற நிலையிலையே கொண்டுவரப்பட்டதும், மக்களின் நில உரிமையினை பறிக்கும் அரசியல் நோக்கத்திற்காகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். மேலும் மேலதிக விசாரணைகளை வழக்கு தொடுநர் தரப்பு செய்ய வேண்டும் எனவும் நீதவானால் பணிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது அடுத்த வருடம் வைகாசி மாதம் இரண்டாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news