பிரபாகரன் நேர்மையானவர் அவரின் அரசியல் நீதி நேர்மையானது என்பதை தமிழர்கள் எப்போதோ கண்டு கொண்டதால் தான் அவருக்கு பின்னால் மக்கள் அணிதிரண்டனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற போதும், அவர் ஒரு நேர்மையான தலைவர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு இன்று (09.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பிரபாகரன் நேர்மையான ஒரு தலைவர். இறுதிவரை போராடிய ஒரு தலைவர்”என அண்மையில் நற்சான்று கொடுத்திருக்கின்றார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன. இக்கூற்று தாம் தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்களின் கடந்த கால வாழ்வை பார்த்து வெட்கிய நிலையில் அவரின் உள்ளத்தில் இருந்து எழுந்ததாயின் வரவேற்கிறோம்.
இத்தகைய நேர்மையாளர் ஒருவரை கொல்வதற்கும் அவரை கொல்வதற்கென லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்வதற்கும் ஏன் சர்வதேச நாடுகளை அழைத்து வந்தீர்கள்? என்று நாம் கேட்கின்றோம். அதற்கு நீதி வழங்கவும் மறுக்கிறீர்கள். இதற்கு மன்னிப்பு கேட்க முடியுமா? அவ்வாறு கேட்டு இருந்தால் அதுவே மனசாட்சி .இதற்கு உங்கள் மனது இடம் கொடுக்கவில்லையெனில் அது இனவாதம்.
பிரபாகரன் நேர்மையாளர் எனக் கூறிய கமல் குணரத்தின அவர்கள் அவரது கொள்கை எனக்கு பிடிக்கவில்லை எனும் கூறுகிறார். கொள்கை பிடிக்கவில்லை என்பதற்காக அவரையும், அவருக்கு பின்னால் இருந்தவர்களையும், பொதுமக்களையும் படுகொலை செய்த வருடம் தோறும் விழா எடுக்கின்றீர்கள் இதுதான் உங்கள் கொள்கையா? உங்கள் தலைவர்களில் மூவரினதும் அவர்களது சகாக்களினதும் பிழையான பொருளாதார கொள்கை திட்டமிடலால் நாடு வறுமைக்குள் என உயர் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியது.
இதனாலா மரணத்தை நோக்கி மக்கள் பயணித்து கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அவர்களை கொலை செய்தீர்களா அவர்களுக்கு இன்றும் ஜெயவேவா கோசம் எழுப்பி கொண்டிருப்பவர்களை கொலை செய்வீர்களா? ஆனால் எத்தனை லட்சம் தமிழர்களை கொலை செய்தீர்கள்.இதுவா உங்கள் சட்டம்? இதுவா உங்கள் பௌத்த தர்மம்?
பிரபாகரன் நேர்மையாளர். அவரின் அரசியல் நீதி நேர்மையானது என்பதை தமிழர்கள் எப்போதோ கண்டு கொண்டதால் தான் அவருக்கு பின்னால் மக்கள் அணிதிரண்டனர். அவருடைய கொள்கையை நேரடியாக ஏற்றுக்கொண்டவர்கள் அக் கொள்கையை நிலைநாட்ட உயிர் கொடையானார்கள். இவர்களை எல்லாம் “பயங்கரவாதிகள்” எனக் கூறுவது என்ன நியாயம் ?அது மட்டுமா நீங்கள் நேர்மையாளர் எனக் கூறியவரின் பிறந்தநாளை கொண்டாட முடியாது. அவரின் கொள்கைகளுக்கு பின்னால் நின்றவர்களை நினைவு கூற முடியாது. இதற்கு பயங்கரவாத தடை சட்டத்தை பாவிக்கின்றீர்கள். கைது செய்து சிறையில் அடைகின்றீர்கள். தண்டனை கொடுக்க முயற்சி எடுக்கின்றீர்கள். இதில் என்ன நீதி நியாயம் உள்ளது ?
தமிழர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொண்டவரின் நேர்மையை காலம் தாழ்த்தி நீங்கள் உணந்திருந்தாலும் நேர்மையான சிங்கள அரசியல் முற்போக்காளர்களுக்கும் தமிழர்களோடு உறவு கொண்டுள்ள சாதாரண சிங்கள மக்களுக்கும் இது தெரியும். அந்த வழியில் நீங்களும் நிற்பது உண்மை என்றால் உங்கள் அரசியல்வாதிகளுக்கு கூறுங்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறுங்கள். பௌத்த சாஸன அமைச்சை கையில் வைத்திருப்பவருக்கும் கூறுங்கள். தொல்பொருள் திணை திணைகளத்தினருக்கும் விசேடமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவுக்கு கூறுங்கள். இதுவே நியாயம்.
மேதகு பிரபாகரன் அவர்களின் கொள்கையும், அரசியல் நீதியும், அதனை அடைவதற்கான செயற்பாடுகளும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஏன் முழு நாட்டுக்குமே பாதுகாப்பாக இருந்தது. அதனை அமுல்படுத்த சிங்கள தலைவர்களுக்கு பேரினவாதம் இடம் கொடுக்கவில்லை. அதனை அழிப்பதாக பாரிய இனப்படுகொலை செய்து ஆயுத யுத்தம் முடிவுற்றதாக நீங்கள் கூறினாலும் தமிழர் பிரதேசத்தில் வேறு வடிவில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. இதனை நீங்களும் அறிவீர்கள். இது ஏன்?
நீங்கள் நேர்மையாளர் எனக் கூறியவரின் அரசியலை ஏற்றுக் கொண்டிருந்தால் நாடு வறுமைக்குள் சென்றிருக்காது. புத்திஜீவிகள்,தொழில் வல்லுனர்கள் நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருக்க மாட்டார்கள். கடனில் நாடு மூழ்கி இருக்காது. அன்னிய ஆதிக்க சக்திகள் வல்லரசுகள் நாட்டில் காலடி வைத்திருக்காது. 2009ம் ஆண்டுக்குப் பின்னர் அன்னிய சக்திகள் எவ்வளவு வேகமாக நாட்டுக்குள் காலடி வைத்துள்ளனர் என்பதை பேரினவாத சிங்கள மக்களை சிந்திக்க வையுங்கள். அதுவே நாட்டை பாதுகாக்கும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரபாகரன் நேர்மையாளர் என்பது அவரது வாழ்வையும்,கொள்கை பிடிப்பையும் அதற்கான அவரது அர்ப்பணிப்பையுமே குறிக்கும். இந்நிலையில் என்றாலும் நீதிக்காக சர்வதேசத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதிக்கு வழிவகுங்கள். அதற்கு உங்களைப் போன்றவர்களோடு சேர்ந்து குரல் கொடுங்கள். தமிழர்களுக்களுடனான உறவை பலப்படுத்துங்கள்.அதுவே நாட்டுக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் சுகம் கொடுக்கும்.
காலம் தாழ்த்தி எண்ணி அரசின் உயர்மட்ட பதவி வைக்கும் ஒருவரின் வாயிலிருந்து நல்ல செய்தி வெளிவந்துள்ளது உண்மையை வெளிவர நீண்ட காலம் எடுக்கும் என்பது உண்மையை அதற்காக அரசியல் ராஜதந்திரத்தோடு தமிழ் தலைமைகள் தமது குடுமிபிடி சண்டையை கைவிட்டு, அடிவருடி அரசியல் செய்யாது, தமிழர்களின் தேசியம் காக்க அரசியல் நாகரீகத்தோடு கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். அது ஒரு நீண்ட பயணம். அதுவே தமிழர்களின் தாகத்தை தீர்க்கும் என மேலும் தெரிவித்தார்.