குருந்தூர்மலை ஆலய நிர்வாகத்தினருக்கும் , பௌத்தமத குருமார்களுக்கும் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் குருந்தூர்மலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குந்தூர்மலை பகுதியில் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் விகாரையினை புனரமைத்திருக்கின்றனர். இதனால் அப்பகுதி தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் இடையே முறுகல் நிலை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில் இனமத நல்லிணக்கத்தினை மேற்கொள்ள என வடகிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட சியம்பலகஸ்கல விமலசார தேரர் தலைமையில், சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் உள்ளிட்ட குழுவினர் மற்றும் குந்தூர்மலை ஆலய நிர்வாகத்தினர், பெளத்த மத குருமார்களுக்கிடையில் இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விஷேட இரகசிய கலந்துரையாடல் இடம் பெற்றிருக்கின்றது.
குறித்த கலந்துரையாடலில் குருந்தூர் மலை தமிழ்மக்களின் பூர்வீகம், இனி குருந்தூர் மலையில் எவ்விதமான பெளத்த கட்டுமானங்களும் அமைக்கப்பட கூடாது, அவ்வாறு அமைப்பது தமிழ் சிங்கள மக்களுக்கிடையே இன முரண்பாட்டை தோற்றுவிக்கும், இச் செயற்பாடு நில அபகரிப்பாகத்தான் இருக்கும் என குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான பல பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தும் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காது இரகசியமான முறையில் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படங்களை எடுத்தது மட்டுமல்லாமல் புகைப்படங்களையும் வெளியே விடாமையானது உள்நோக்கம் ஏதும் இருக்குமோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.


