தமிழ் அரசியல் தலைமைகள் உடனடி கவனம் செலுத்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை.

வெறுப்புணர்வுகள் மற்றும் புறக்கணிப்புகள், சாதிய அடக்குமுறை, ஆணாதிக்கம் ஆகிய பிற்போக்கான போக்குகளிலிருந்து தமிழ் சமூகத்தின் சிந்தனையை மாற்றி, சமூக சமத்துவ சிந்தனையைக் கட்டியெழுப்புவதன் மூலம் மாத்திரமே தனக்கான எதிர்காலம் குறித்து விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் ஆற்றல்கொண்ட உறுதியான தமிழ்த்

தமிழ் அரசியல் தலைமைகள் உடனடி கவனம் செலுத்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை.
அனைத்து தமிழ் அரசியல் தலமைத்துவங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரான கண்டுமணி லவகுசராசாவினால் இன்றைய தினம் (25.01.2024) ஊடகங்கள் ஊடாக வெளிப்படை ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கை தொடர்பாக மேலும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்துக்கு
தமிழ்த் தேசிய அரசியலின் வரலாற்றிலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் முதன்முதல் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவுசெய்வது கடந்தவாரம் நடைபெற்றுள்ளது. இந்த ஜனநாயகப் பண்பை வரவேற்பதோடு இது நிலைத்திட வேண்டுமென அவாவுகிறோம்.
இலங்கை நாட்டின் உள்ளக அரசியல், பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியன சிக்கல்மிக்கதாகக் காணப்படும் தற்போதைய சூழலில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றிருக்கும் சிவஞானம் சிறிதரன் (பா.உ.) அவர்களின் முன்னால் பாரிய கடப்பாடுகள் குவிந்துள்ளன. இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாக இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சியொன்றின் தலைமைத்துவம் என்ற வகையில் அவரும் அவர் சார்ந்த கட்சியினரும் அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களென பின்வருவனவற்றை வலியுறுத்துகிறோம்:
• வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும்
• உணர்ச்சிகரமான அரசியல் என்பது நாம் எமது சுய தேசிய உணர்ச்சிகளுக்கு தீனி போடுவது மாத்திரமேயாகும். இது தமிழ் தேசத்தை ஏனைய சமூகங்களிடமிருந்து அந்நியப்படுத்துவதுடன் தமிழ் தேசம் தனது நியாயாதிக்கத்தை சர்வதேச அளவில் இழக்கவும் காரணமாகிறது. தமிழ் தேசிய அரசியலை அறிவுபூர்வமான நவீன அரசியல் கொள்கைகளுடன் கூடிய அரசியலாக பரிணமிக்கச் செய்யவேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது.
• வடக்கு கிழக்கு பிரதேசத்தை தமது தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கும், அதேபோல் இப்பிரதேசத்தை தமது பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மையினராக பல காலமாக எல்லையோரக் கிராமங்களில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய கடப்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தமிழ்த் தேசிய அரசியலையும் தழிழ் மக்களையும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களிடமிருந்து பிரிக்காதவாறு கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
• குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில், தமிழ் தேசிய அரசியல் தலைமைத்துவங்கள் சார்ந்து சந்தேகங்கள் எழாதவாறு உறவுகளை வெளிப்படைத் தன்மையுடன் பேணவேண்டிய பொறுப்பு காணப்படுகிறது
• வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தில் காலங்காலமாகக் காணப்பட்டுவரும் “சமூக ஊனங்களான” யாழ் மேலாதிக்கவாதம், பிரதேசவாதம், மத ரீதியான வெறுப்புணர்வுகள் மற்றும் புறக்கணிப்புகள், சாதிய அடக்குமுறை, ஆணாதிக்கம் ஆகிய பிற்போக்கான போக்குகளிலிருந்து தமிழ் சமூகத்தின் சிந்தனையை மாற்றி, சமூக சமத்துவ சிந்தனையைக் கட்டியெழுப்புவதன் மூலம் மாத்திரமே தனக்கான எதிர்காலம் குறித்து விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் ஆற்றல்கொண்ட உறுதியான தமிழ்த் தேசத்தை கட்டியெழுப்ப முடியும். அத்தகைய ஒரு மக்கள் சமூகத்தால் மாத்திரமே தனது அரசியல் இலக்குகளை அடையமுடியும். இதை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமது அடிப்படைக் கொள்கையாக ஏற்கவேண்டும்.
• சிங்கள இனவாத அடக்குமுறைகளின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழ்மக்களின் வழித்தோன்றல்கள் வடக்கு கிழக்கின் மக்கள் வாழ்வியலுடன் பிணைந்துவிட்டனர். இந்தப் பிணைப்பில் சிறு கீறல்கூட ஏற்படுத்தாவண்ணம் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.
• தமிழரசுக் கட்சி அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிலும் பெண்கள் மற்றும் இளையோரின் பங்கேற்புக்கு கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. தழிழ் அரசியல் தளத்தில் முற்போக்கான ஜனநாயகமான சிந்தனைகள் பரிணமிக்காது தமிழ்த் தேசிய அரசியல் தளம் முடங்கிக் கிடப்பதற்கு இது முக்கிய காரணமாகும். தமிழ்க் கட்சிகள் தமது அங்கத்துவ எண்ணிகையை உயர்த்தி மக்கள் மயப்பட்ட கட்சிகளாக தமது கட்சிகளை மாற்ற வேண்டும்.
• புலம்பெயர் நாடுகளில் வாழும் பல்வேறு சக்திகளும் தமிழ் அரசியலில் தமது செல்வாக்கைச் செலுத்த முயல்கின்றனர். இவர்களின் ஆளுகைக்கு உட்படாது, வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தில் வேரூன்றி தமது உரிமைக்காக அன்றாடம் போராடிக்கொண்டு வாழுந்துவரும் மக்களின் நலன்களையே தமிழ் அரசியல் கட்சிகள் பிரதிபலிக்க வேண்டும்.
• அரச இனவாதத்துக்கு சரணடையாத கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்
• தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சிதறிக் கிடக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளவும் பலப்படுத்த வேண்டும். ஆபிரிக்க தேசிய காங்கிரசில் காணப்பட்ட கூட்டுப் பலமே தென்னாபிரிக்க மக்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த உண்மையை தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்றாக வேண்டும்.
• வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையான, “ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” என்பதை தமது இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்.
சமஷ்டி தீர்வு
நன்றி
சேவையிலுள்ள
கண்டுமணி லவகுசராசா,
ஒருங்கிணைப்பாளர்,
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு
இலங்கை
25 தை மாதம் 2024

Latest news

Related news