தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் சிறுபோக பயிர் செய்கைக்கான நீர் வழங்கலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் (வீடியோ)

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழுள்ள சிறுபோக பயிர் செய்கைக்கான நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் தற்போது நடைபெற்று வரும் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரினை வழங்குவது தொடர்பில் எழும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் முல்லைத்தீவு குமுழமுனை கமநலசேவை நிலையத்தில் நேற்றையதினம் (07.05.2024) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் 2700 ஏக்கர் சிறுபோக செய்கை இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டிக்கின்றது. அத்தோடு கழிவுநீரில் கிட்டதட்ட 1000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வருடம் தீர்மானிக்கப்பட்டதனை விட அதிகமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதனால் தற்போது குளத்திலுள்ள தண்ணீர் போதாமலுள்ளது. மழை இல்லாத நிலை அதற்கு மாறாக வெப்பமான காலநிலையே நிலவி வருகின்றது. அதனால் குளங்கள், வாய்க்கால் என்பதனை விட ஒவ்வொரு வயல் நிலங்களினாலும் நீர் ஆவியாகின்றது ஆகையால் நீரை வீண்விரயமாக்காது சிக்கனப்படுத்தி பயிர் நிலங்களுக்கு பாய்ச்சுவதனாலே சிறந்த அறுவடையை பெற முடியும் எனவும், பயிர் செய்கைக்கு தேவையான தண்ணீரை வீண்விரயமாக்காது பயிருக்கு பாய்ச்சுதல், தண்ணீரை பகிர்ந்தளிக்கும் விதம், எவ்வாறு சேமிப்பது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தற்போது பயிர் செய்யப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் வழமையாக நீர் பாய்வது போல் பாய விடுமாறும் அதற்கு தாங்களே பொறுப்பு என விவசாயிகள் கூறியதனையடுத்து குறித்த கலந்துரையாடலை அதிகாரிகள் முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்தையன்கட்டு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் ,கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர், விவசாயிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Latest news

Related news