கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது; அகழ்வாய்வுகள் ஜூலையில் மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று அறிவிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு மே(16) வியாழக்கிழமை இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.
 
 இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. 
 
இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. 
 
அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிறஞ்சன் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்றுவீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிறஞ்சன் தெரிவித்தார்.
 
மேலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றிம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
 
 அந்தவகையில் அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news