பௌத்த பிக்குகளுடைய நடவடிக்கைகளுக்கு துணை போகின்றவர்களாக தான் அரசாங்கத்தை சேர்ந்த இனவாதிகள் இருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்றையதினம் (18.06.2024) வழிபாட்டினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் மக்கள் தொடர்ச்சியாக வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் ஏற்கனவே பல தடவை வழிபட்டு வந்திருந்தாலும் இன்றும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தோம்.
குருந்தூர்மலை விடயம் ஏற்கனவே பூதாகரமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எங்களுடைய வரலாறுகள் இங்கே இருக்க கூடியதாக தொல்லியல் திணைக்களமும், பௌத்த பிக்குமாரும் சேர்ந்து தொல்லியல் தொடர்பான நடவடிக்கைகளை செய்கின்றோம் என்று கூறி பௌத்த விகாரையை அமைத்திருந்தார்கள். இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் அது நிறுத்தப்பட்டது. எமக்கு வழிபடலாம் என தீர்ப்புக்கள் கூறினாலும் அதற்குரிய முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
இதற்குரிய தீர்வானது மிக விரைவில் கிடைக்க வேண்டும். அத்துமீறி விகாரை அமைத்ததற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நீதியான வகையில் தீர்ப்புக்கள் கிடைக்கும் என எதிர் பார்த்திருந்தாலும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து கொழும்பு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நடைபெறுவதாக அறிகின்றோம். அதற்கான தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை.
மிகிந்தலையில் இருந்து பௌத்த பிக்குமார் குருந்தூர்மலைக்கு வருவது அத்துமீறிய செயற்பாடு என்றே கருதுகின்றோம். அரசாங்கம், இராணுவம், பொலிஸார் அவர்கள் பௌத்த பிக்குமார் செய்கின்ற நடவடிக்கை அனைத்தும் ஏனைய சமூகங்களை , சமயங்களை அவமதிப்பதாக இருந்தாலும் பௌத்த பிக்குகளுடைய நடவடிக்கைகளுக்கு துணை போகின்றவர்காளாக தான் அரசாங்கத்தை சேர்ந்த இனவாதிகள் இருக்கின்றார்கள்.
அந்தவகையில் அவர்கள் மிகிந்தலையில் இருந்தும், கொழும்பில் இருந்தும் வருவார்கள். நாங்கள் சாதாரணமாக வழிபாட்டை மேற்கொள்ளவே இடையூறு இருக்கின்றதே தவிர அவர்கள் எவ்வாறு செய்தாலும் அதனை தட்டி கேட்க யாரும் இல்லை. ஏற்கனவே பௌத்த பிக்குகள் அத்துமீறிய செயற்பாட்டை மேற்கொண்டிருந்தும் கூட அவர்களுக்கான நடவடிக்கை இங்கே எடுக்கப்படவில்லை.
எங்களை தான் தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு அழைப்பதும் , பொலிஸார், பௌத்த பிக்கு, தொல்லியல் திணைக்களம் வழக்கு தொடுப்பது என தங்களுடைய நிர்வாக வடிவத்திற்குள் இருந்து கொண்டு எங்களை தான் அவ்வாறு செய்கிறார்கள். நாங்கள் அப்படியல்ல. தமிழர்கள் தான் ஆதிகாலம் தொன்றுதொட்டு வழிபட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. சிங்கள பௌத்த பிக்குகள் சிலர் சிங்கள இனவாதிகள் கூட அதற்கான கருத்துக்களை கூறியுள்ளனர்.
எமக்கு தேவை எமது மதத்தின் வழிபாட்டினை நாங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். எங்களுடைய மதத்தின் வழிபாட்டினை நாங்கள் மேற்கொள்வதற்கு எத்தடை வரினும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என மேலும் தெரிவித்தார்.