சரணடைந்தவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்களா? கஜேந்திரன் எம்பி கேள்வி 

சரணடைந்தவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என கஜேந்திரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்றையதினம் (20.08.2024) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.

 

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 

கொக்குத்தொடுவாயில் கடந்த வருடம் ஜூலை மாதம் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த இடம் பொலிசாருடைய நீதிமன்றத்தினுடைய, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அகழ்வு பணிகள் இடம்பெற்று 52 உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுடைய என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை.

 

அந்த அகழ்வு பணியின் போது, பல தகட்டு இலக்கங்கள், விடுதலைப் புலிகளுடைய அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற தகட்டு இலக்கங்கள் மற்றும் அவர்களுடைய உடல்களிலே, துப்பாக்கி சன்னங்கள், பாய்ந்ததற்கான தடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

 

அவர்களுடைய கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் இங்கே அம்மாக்கள் கூறியிருக்கின்றார்கள். முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் சப்பாத்து நூல்கள் மூலமாக, கட்டப்பட்டிருக்கின்றது. 52 உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலே எங்களைப் பொறுத்தவரையிலே இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அம்மாக்கள் கூறியது போன்று ஒன்றில் முள்ளிவாய்க்கால் முடிவிலே வட்டுவாகலில், இராணுவத்தினரிடம் சரணடைந்த, முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களோடு சென்ற மனைவிகள், மற்றும் பிள்ளைகள் அதனை விட, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள், ஓமந்தை பகுதியிலும் மற்றும் வவுனியா தடுப்பு முகாமிலும் இராணுவத்தினரால் தேடி, தேடி கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கானவர்கள், காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

இவ்வாறு சரணடைந்தவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என்கின்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் ராஜ்சோமதேவ அவர்கள் கூற முற்படுவது போன்று இது 1994, 1995 ஆம் ஆண்டு, காலப்பகுதிக்குரிய சடலங்களாக இருக்கலாம் என்றால் அவர்கள் கூற முற்படுவது போன்று மணலாற்றிலே ஒரு யுத்தம் நடைபெற்றிருந்தது.

அதில் கணிசமான போராளிகள் வீரச்சாவடைந்திருந்தார்கள். அது அவர்களுடைய உடல்கள் தான் என கூறுவதாகவே அவர்களுடைய கதை இடம்பெற்றிருந்தது . அவ்வாறாயின் கைகள் கட்டப்பட்டதற்கான வாய்ப்புகள் இல்லை.

 

இறுதி போரிலே சரணடைந்தவர்கள் தான் சித்திரவதைக்கு பிற்பாடு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுடைய சந்தேகம்.

இங்கே தாய்மார் குறிப்பிட்டது போன்று அந்த சீருடைகள் பழுதடைந்து உக்கி, இறந்து போகாமல் இருந்திருக்கிறது என்று சொன்னால் அது மிக அண்மையிலேதான் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையிலே இது 2009 ஆம் ஆண்டு சரணடைந்தவர்கள் அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை, கொன்று புதைத்திருக்கிறார்கள் என்பது எங்களுடைய சந்தேகம் .

 

இந்த பிரதேசம் 1984 ஆம் ஆண்டு விமானங்கள் மூலம் துண்டுப்பிரசுரம் போடப்பட்டும் , நேரடியாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டும் பலவந்தமாக மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

வெளியேற்றப்பட்ட பிற்பாடு இந்த பிரதேசம் முழுமையாக இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டிலே கொண்டுவரப்பட்டிருக்கிறது. யுத்தம் முடிகின்ற வரையில் இந்த பகுதியிலே மிகப்பெரிய இராணுவ தளம் இருந்தது. முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டிலே இருந்திருந்தது.

 

ஆகவே இங்கே விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டில் இது 1984 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு நாள் கூட இருந்ததில்லை. அவ்வாறு இருக்கிற போது இராணுவ கட்டுப்பாட்டிலே இராணுவ முகாமுக்கு அருகே அதனுடைய முன்னரங்கத்திலே இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, என்றால் இதற்கு நிச்சயமாக, இலங்கை இராணுவத்தினர்தான், முழுமையாக பொறுப்பு கூற வேண்டும்.

 

இவ்வாறான நிலைமையிலே அரசியல் மயப்படுத்தப்பட்டு இனவாதபடுத்தப்பட்டு, ஊழல் நிறைந்ததாக இருக்கிற இலங்கை காவல்துறை, இலங்கை நீதித்துறை மற்றும் ஏனைய திணைக்களங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களுமே, அரசியல் மயப்படுத்தப்பட்டு இனவாதம் மயப்படுத்தப்பட்டு, ஊழல் மயப்படுத்தப்பட்டு, தமிழர்களுக்கு எதிரானதாக இருக்கின்ற நிலையிலே தமிழர்கள் ஒரு சில திணைக்களங்களிலே, பொறுப்பான பதவிகளில் இருந்தாலும் அவர்களால் சுதந்திரமாக செயற்பட முடியாது

 

 

இந்த இடத்திலே கிராமசேவையாளர் கூட கொடுத்த அறிக்கையிலே பல விடயங்கள் தெரியாது என்றுதான் கூறப்பட்டிருப்பதாக அறியக்கூடியதாக இருக்கிறது. அப்படி என்றால் இங்கே ஒரு சுதந்திரமான, சுயாதீனமான செயற்பாட்டை நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நாங்கள் உள்ளக பொறிமுறை விசாரணையை முற்று முழுதாக நிராகரிக்கிறோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக அந்த மக்களுடைய கோரிக்கையாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவது தொடர்பாக ஒரு முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான மரபணு பரிசோதனை கூட சர்வதேச சமூகத்தால் பொறுப்பெடுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். உள்ளக பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லை. உள்ளக நீதி கட்டமைப்புகள் மீதும் நம்பிக்கை இல்லை.

 

இங்கே பிரதேசங்களில் இருக்கின்ற நீதிபதிகள் தமிழர்களாக இருந்தாலும் கூட இலங்கை அரச கட்டமைப்பு என்பது, இனவாத மயப்படுத்தப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே இலங்கை அரச கட்டமைப்புக்குள் உள்ளக பொறிமுறைக்குள் முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு நீதி பொறிமுறையையும் நாங்கள், ஏற்றுக் கொள்வதற்கோ, நம்புவதற்கோ தயாராக இல்லை.

 

ஒரு முழுமையான சர்வதேச, பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் மீள, மீள வலியுறுத்துகிறோம். இங்கே அம்மா ஒருவர் குறிப்பிட்டது போன்று இந்த அகழ்வு பணிகள் வெளிப்படை தன்மையோடு நடத்தப்படவில்லை.

 

ஊடகவியலாளர்களுக்கு இந்த ஆகழ்வுப்பணி நடைபெறும் போது தொடர்பாக அவர்கள் அவதானிக்க கூடியதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அடாவடிகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சில தமிழர்களை வைத்துக்கொண்டே ஊடகவியலாளர்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உறுக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறான செயற்பாடு நடைபெற்றிருக்கிறது.

 

இவ்வாறான செயற்பாட்டினை நாங்கள் ஒரே கண்துடைப்பாகவே பார்க்கின்றோம். உள்ளக விசாரணை செயற்பாட்டை முற்றாக நிராகரித்து சர்வதேச விசாரணையை நாங்கள் வலியுறுத்துகிறோம் என மேலும் தெரிவித்தார்.

Latest news

Related news