தமிழ் தலைவர்கள் அனுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களுக்கே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டமானது தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் தலைமையில் நேற்று (26.10.2024) இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் ,
அனுரகுமார திஸாநாயக்க ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். ரணிலோ, சஜித்தோ, நாமலோ கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வரிசையில் நின்று அரச வைத்தியசாலையில் மருந்து எடுத்திருப்பார்களா? இல்லை. ஏதாவது ஒரு விடயத்திற்கு வரிசையில் இருந்திருப்பார்களா?
அவர்களுக்கு சாதாரண மக்களுடைய பிரச்சினை தெரியாது. ஆகவே எமது வர்க்கத்தை சேர்ந்தவர் தற்போது ஜனாதிபதியாகி இருக்கின்றார்.
இதிலிருக்கும் கணிசமானவர்கள் யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக இருக்கலாம். பெரும்பாலனவர்களது வீடுகள் சேதமடைந்திருக்கலாம். அதேபோல் அனுர குமார திஸாநாயக்கவின் 1979 ஆம் ஆண்டு இராணுவத்தால் தாக்கப்பட்டிருந்தது.
யுத்தத்தினால் உற்றார், உறவினர்கள் உயிரிழப்புக்களை சந்தித்திருக்கலாம் அதேபோல் அனுர அவர்களது ஒரேயொரு அண்ணா ரயர் கொழுத்தி கொலை செய்யப்பட்டார். யுத்தம் மிகவும் வித்தியாசமான யுத்தம். யுத்தத்தின் போது சாதாரண சிங்கள, தமிழ் மக்கள், இளைஞர்கள் தான் கொல்லப்பட்டார்கள். ஜனாதிபதியின் சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்த ஒருவரே ஜனாதிபதி ஆகியிருக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தி வடமாகாணத்தில் மக்கள் மத்தியில் பதிந்து கொண்டு வருகின்றபடியால் பல கட்சிகள் அவதூறுகளை பரப்பிகொண்டு வருகின்றார்கள். சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, சிறீதரன் போன்றவர்கள் அனுர அவர்களை சந்தித்து கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் எவ்வளவு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள் என்பதனை உணரமுடியும். முன்னாள் அமைச்சர்கள் கூறுகிறார்கள் அனுர அவர்களுடன் படத்தை எடுத்து பத்திரிகையில் பிரசுரித்து அடுத்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சர் அவர்தான் என்று கூறுமளவிற்கு அவர்கள் வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள்.
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடுத்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சர் அவர்தான் என்று . அவ்வாறு நாங்கள் செய்வதாக இருந்தால் நீங்கள் எங்களிடம் வரமாட்டீர்கள். அதனால் அவர்களுக்கு நாங்கள் கூறுவது எங்களை மன்னியுங்கள்.
அனுரவோடு படம் எடுத்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பார்கள். அமைச்சரவை கொடுப்பதாயின் படம் எடுத்த அனைவருக்குமே கொடுக்க வேண்டும்.
டீல் அரசியலில் நாம் ஈடுபட மாட்டோம். அடுத்த அரசாங்கத்தில் அடுத்த அமைச்சர்களாக பதவியேற்பதும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெறும் நேர்மையான ஊழலற்ற நபர்களே என்பதை உறுதியாக கூறுகின்றோம்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கூட்டம் ஒன்றிற்கு வருகின்றார். அதேபோல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வருகின்றார். அக் கூட்டங்களிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அடுத்த 14 ஆம் திகதி தேர்தலுக்கு பின்னர் மிக வேகமாக நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துடன் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்போம் என மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் விமல் ரத்னாயக்கா, வன்னி தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளர் யோகராசா சிவரூபன் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மருங்கன் மோகன், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.