இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம்.
தமிழர் தாயகத்தின் தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் நான் தனித்துவமாகவும், இதய சுத்தியுடனும் எதுவித சமரசத்திற்கும் இடமின்றி எமது மக்கள் நலன் சார்ந்து செயற்படுவேன் என உறுதி கூறுகின்றேன்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நேற்றையதினம்(27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளரும், ஆசிரியருமான காந்திநாதன் திருமகன் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் எமக்கு நிலையான அரசியல் தீர்வே அவசியம்.
குறைந்த பட்சம் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றையே தமிழரசுக் கட்சியாகிய நாம் திடமாக வலியுறுத்தி நிற்கின்றோம்.
இலங்கையில் நாம் சிறுபான்மையினர் அல்ல. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள இனமாவோம்.
எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை குறைந்த பட்சம் சமஸ்டி முறைமையின் மூலம் உறுதி செய்து கொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.
இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்குமுறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர். எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர நாம் கட்சிகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்து செயற்படுவோம்.
இதற்காக, நாம் அனைவரும் ஜனநாயக வழிநின்று செயற்படும் ஒரு மக்கள் இயக்கமாக பரிணமிக்க வேண்டும்.
இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் முதற் கட்டமாக தேசிய கட்சிகளை நாம் புறந்தள்ள வேண்டும் அவர்கள் ஒருபோதும் எமக்கான அரசியல் தீர்வினை இதய சுத்தியுடன் வழங்க மாட்டார்கள். அதில் போட்டியிடுபவர்கள் எம்மவர்களாக இருந்தாலும் அவர்களால் அவர்களின் தலைமைகளை எதிர்த்துக் கேள்வி கேட்கத் திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர்.
தமிழ் தேசியத்தின் அழிவின் விளிம்பில் இன்று நாம் நிற்கின்றோம், இதற்கு பிரதானமான காரணம் எமது மக்களின் வாக்கில் பாராளுமன்றம் சென்று மக்களை மறந்துபோன எமது தலைவர்களே, அவ்வாறானவர்களைப் புறந்தள்ளி இம்முறை புதியவர்களே தமிழரசுக் கட்சியில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றோம். அதில் நான் இலக்கம் 2ல் போட்டியிடுகின்றேன்.
இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் தேசிய உணர்வுள்ள, செயற்திறனுள்ள அதிக பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டிய அவசர, அவசிய நிலை ஏற்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் தமிழரின் அரசியல் இருப்பே வடகிழக்கில் இல்லாத வெறுமையான நிலை ஏற்படப் போகின்றது.
எனவே, அதிக மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்வதனூடாக மட்டுமே எமது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வை வலியுறுத்த முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த வன்னி நிலப்பரப்பு எங்கும் முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை நீந்தித் திரிந்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையிலும் மக்களையும் மக்களின் பிரச்சினைகளையும் நன்கு அறிந்தவன் என்ற வகையிலும் உங்களின் குரலாக என்னையும் ஒருவனாக நீங்கள் அதிகூடிய விருப்பு வாக்கில் பாராளுமன்றம் அனுப்ப முன்வர வேண்டும் என உரிமையுடன் கேட்கின்றேன். எனத் தெரிவித்தார்