தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால உண்மை முகம் வெளி வரும் நிலையில் வன்னித் தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார்.
ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழலுக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுர மக்களுக்கு வழங்கிய ஆணையை பதவிக்கு வந்த பின்னர் மறந்து செயற்படுவதுடன் தமது பழைய கோர முகங்களை காட்ட ஆரம்பித்து விட்டனர்.
ஜனாதிபதி அனுர, பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பேன், தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவேன் என உறுதி மொழிகளை வழங்கிய நிலையில் தற்போது அவரது அமைச்சர் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க முடியாது, பொலிஸ் காணி அதிகாரம் வழங்க முடியாது, வடகிழக்கை இணைக்க முடியாது என கூறுகிறார்.
இதுமட்டுமன்றி இலஞ்சம் ஊழல்களை ஒழிப்போம் கடந்த கால பாரிய ஊழல் மோசடிகள், மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்காரர்களை ஆட்சிக்கு வந்ததும் உடன் கைது செய்வோம் என கூறியவர்கள், பார் அனுமதிப் பத்திரங்கள், எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிகளைப் பெற்றவர்களை ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் வெளிப்படுத்தவில்லை.
வடகிழக்கு மக்கள் பல்நெடுங்காலமாக தமது அரசியல் தீர்வுக்காக போராடி வரும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால பொய் வாக்குறுதிகளுக்கு தாயக மக்கள் ஒருபோதும் எடுபட மாட்டார்கள்.
தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடன் பயணிக்கின்றவர்கள் என்பதை தென்னிலங்கை சக்திகளுக்கும், அவர்களின் எடுபட்ட கறிவேப்பிலை முகவர்களுக்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துக் காட்டுவதற்காக தமிழ் மக்களின் பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்த முன்வர வேண்டும் என்பதுடன் வன்னித் தேர்தல் தொகுதியில் இலக்கம் 2ல் போட்டியிடும் என்னையும் அதிகூடிய விருப்பு வாக்கில் பாராளுமன்றத்திற்கு உங்களின் குரலாக அனுப்ப முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.