லக்கல – தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 7 கோடி பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (10) இரவு வர்த்தகர், அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தையினது கை, கால்களை கட்டி வைத்து இந்த திருட்டை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் கார் இன்று (11) காலை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகிரியாகம பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணிக்கக்கல் வர்த்தகரிடம் இருந்த பணம், தங்கம் மற்றும் சுமார் 3 கோடி பெறுமதியான மாணிக்கக்கல் போன்றவற்றையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
வீட்டின் பின்புற சுவரின் வழியாக நுழைந்த கொள்ளையர்கள் முகத்தை மூடிக்கொண்டு வர்த்தகரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து பயமுறுத்தி, கை, கால்களை கட்டியவாறு வீட்டிற்குள் அழைத்துச்சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் கொள்ளைச் சம்பவத்தை செய்துவிட்டு காருடன் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகரின் மனைவி மற்றும் தந்தை விசாரணைகளுக்காக தம்புள்ளை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.