எங்களுடைய மண் உயிர்ப்புள்ள மண். எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் ,இரத்தத்தால் நனைந்த மண்ணை காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை எமக்குள்ளது என முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரும் , ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளருமான கமலநாநன் விஜிந்தன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் அவரது அலுவலகத்தில் இன்றையதினம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை இடம்பெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் இலங்கை வரலாற்றிலே அதிலும் குறிப்பாக வடகிழக்கிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பலராலும் எதிர் பார்க்கப்படுகின்ற தேர்தலாக காணப்படுகின்றது.
ஏனெனில் இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலே பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கடந்த காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தது. இன்று அது குறைவடைந்து குறைவடைந்து சிதைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்தேசிய கூட்டமைப்பை பல்வேறுபட்ட புல்லுருவிகளை கொண்டு இலங்கை அரசு திட்டமிட்டு உடைத்திருக்கின்றது.
அந்தவகையில் நாங்கள் எங்களுடைய மண்ணையும், மக்களுடைய அபிலாசைகள், உரிமை , இறமை போன்ற பல்வேறு விடயங்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழ் தேசியத்தை உயிராக நேசிக்கும் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் சங்கு சின்னத்தில் களமிறங்கியிருக்கின்றோம்.
வன்னி மாவட்டத்திலே புதிய இளைய வேட்பாளராக சங்கு சின்னத்திலே, 8 ஆம் இலக்கத்திலே களமிறங்கி இருக்கின்றேன்.
எங்களுடைய இனத்தினுடைய இருப்பை தமிழனுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை குறைக்கின்ற நோக்கோடு அரசாங்கம் பல்வேறுபட்ட திட்டங்களை வகுத்து எங்களுடைய இருப்பை அல்லது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காக பல்வேறுபட்ட சுயேட்சை குழுக்களை குறிப்பாக வன்னி மாவட்டத்திலே களமிறக்கி இருக்கிறார்கள்.
இந்த விடயத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழனை வைத்தே தமிழனை அழிக்கும் செயற்பாடு, உரிமைகளை மறுக்கின்ற செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. எங்களுடைய மண் உயிர்ப்புள்ள மண். எங்களுடைய மண் இரத்தத்தால் நனைந்த மண் ,இரத்தத்தால் நனைந்த மண்ணை நாங்கள் காப்பாற்ற வேண்டிய பெரும் கடமையாக காணப்படுகின்றது.
இந்த கடமை உணர்வுகளை மறந்து , மண்ணினுடைய தியாகங்களை மறந்து அர்ப்பணிப்புக்களை மறந்து, நாங்கள் விலை போய் , தமிழனே தமிழனிற்க்காக விலை போய் எங்களுடைய இருப்புக்களை அழித்து, எங்களுடைய அடையாளங்களை அழித்து , எங்களுடைய கலாச்சாரங்களை அழித்து செயற்படுவதற்கு அவர்களிடம் குறிப்பிட்ட பணத்திற்காக சிலர் விலை போய் சுயேட்சையாக களமிறங்கி இருக்கின்றனர்.
தேர்தலிற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் பல சுயேட்சை குழுக்கள் தாம் எதற்காக இறக்கப்பட்டோம் என்பதனை புரிந்து விலகி எம்முடன் இணைந்து ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.
எமது வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக , எங்களையும், இனத்தையும் அழித்து கொள்வதற்காக பல்வேறுபட்ட சுயேட்சை குழுக்கள் பல மில்லியன் ருபாய் நிதியை செலவு செய்கிறார்கள். என்றால் அதிலே உண்மையான விடயம் தங்கியுள்ளது. ஏனெனில் தேர்தலுக்கு முற்பட்ட காலத்தில் எங்கள் மண்ணிலே நடமாடாதவர்களும், மண்ணை தெரியாதவர்களும் முப்பது நாட்களுக்குள் செய்கின்றார்கள் எனில் ஏதோ களவெடுக்கவே முனைகிறார்கள்.
இவ்வாறானவர்களை நிராகரித்து இரத்தம் சிந்திய போது எங்களுடைய பணங்களை கொண்டு சென்றவர்கள். நாங்கள் சிந்திக்க வேண்டிய விடயம் இவர் பொருத்தமானவரா என சிந்தித்து , இந்த மண்ணிலே வாழ்ந்தாரா, இந்த மண்ணிலே நடைபெற்ற இன்ப துன்பங்களில் கலந்து கொண்டாரா, மக்களுடைய விடுதலைக்காக, பயணத்திற்காக போராடினாரா போன்ற பல்வேறு விடயங்களை பார்த்து கொள்ள வேண்டும்
படித்தவர், படிக்காதவர், பணக்காரன், ஏழை என்பதை விடுத்து எங்களுடைய சமூகத்திற்காகவும், மக்களுக்காகவும் , உரிமைக்காகவும் தொடர்பாக களத்தில் நின்றவரை ஆதரிக்க வேண்டும்
உங்களுடைய வாக்கினை சிதறடிக்காமல் அதற்கு விலை போகாமல் மக்கள் அனைவரும் இணைந்து வன்னி மாவட்டத்திலே உரித்தான வாக்கினை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கி சங்கினை ஒலிக்க விட வேண்டும். அந்தவகையில் சங்கு சின்னத்திற்கும், 8 ஆம் இலக்கத்திற்கும் வாக்களித்து இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொடர்ச்சியாக பலமான அதிகாரத்தை கொண்ட வகையிலே பணி தொடர உங்களுடைய வாக்கினை அளிக்குமாறும் உங்களுடைய குரலாக, உங்களில் ஒருவனாக , உங்களோடு வலியை சுமந்தவனாக எந்த தடை வந்தாலும் தொடரும் என மேலும் தெரிவித்தார்.