வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் அரைமரதனோட்ட போட்டியானது நேற்றையதினம் 06.07.2025 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்திருந்தது.
தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் (கனடா) அவர்களின் முற்றுமுழுதான நிதி அனுசரணையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீதியோட்ட நிகழ்வானது16 வயது தொடக்கம் 20 வயது வரையுள்ள ஆண், பெண் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி இடம்பெற்றிருந்தது. விசேடமாக மரதனோட்ட வீரர்களை வளப்படுத்தும் நோக்கோடும் சாதிக்க துடிக்கின்ற இளம் சாதனையாளர்களுக்கு சிறந்த களங்களை வழங்கும் நோக்கோடும் 14 மற்றும் 15 வயது பாடசாலை மாணவர்களுக்கான 5 கிலோமீட்டர் தூரத்தினை கொண்ட சிறிய வீதியோட்ட நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
மரதனோட்டத்துறைக்கு புத்துயிர் கொடுத்து வருகின்ற முன்னால் தேசிய மரதனோட்ட வீரரும், கனடா வாழ் குமுழமுனை கந்தசாமி பத்மநாதனின் முற்று முழுதான நிதி அனுசரணையில் தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான வடமாகாண ரீதியிலாக மாபெரும் அரைமரதனோட்டப் போட்டியாக இடம்பெற்றிருந்தது.
வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான வெற்றிக்கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இலக்கையடைந்த அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் விளையாட்டும் உடற்கல்வி பிரதி கல்வி பணிப்பாளரான ராஜசீலன், மாகாண கல்வி திணைக்களத்தின் ஆரம்ப உதவி கல்வி பணிப்பாளர் ரவீந்திரன், முல்லைத்தீவு மாவட்ட உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரி.டிலான், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இ.சகீதரசீலன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜெயவரதன் சிவசாந்தி, முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் (கனடா) , புலம்பெயர் உறவு கந்தசாமி நுட்பராசா, வடக்கு மாகாணத்தின் கல்வி வலயங்களின் ஆசிரிய ஆலோசகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.