முல்லைத்தீவில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி :  கடலிற்குள் சென்ற எச்சரித்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து நேற்று (15.09.2025) இரவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாக பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துமிருந்தார்.

குறிப்பாக கொக்கிளாய் முகத்துவாரம் மற்றும் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறித் தங்கியுள்ள நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மீனவர்களாலும், திருகோணமலைப் பகுதி மீனவர்களாலுமே இவ்வாறு மிக அதிகளவில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடலில் இருந்து பார்வையிடும் கரையில்தெரியும் வெளிச்சத்தைவிடவும் சட்டவிரோத வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் படகுகளின் வெளிச்சம் அதிகமாக தென்படுகின்றது.

அந்த அளவிற்கு மிக அதிகளவில் சட்டவிரோத வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தநிலமைகளை வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு நேரடியாக காண்பித்த முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், இவ்வாறான அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவில் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனை குழுக்கூட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், கடற்றொழிலாளர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்சியாக குரல் எழுப்பிவருவதை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். அத்தோடு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே நேரடி களவிஜயத்தின்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதை ஆதாரப்படுத்தும் வகையில் சேகரிக்கப்பட்ட விடயங்களை உரிய இடங்களுக்கு கொண்டுசென்று இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.

Latest news

Related news