புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு பெருவிழாவும் நூல் வெளியீடும்! கலைஞர்களுக்கான வாய்ப்பு. 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் அந்த வாய்ப்பை கலைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இராசரட்ணம் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்றையதினம் (21.09.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச பண்பாடு பெருவிழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், புதுக்குடியிருப்பு மேம்பாட்டுபேரவை, அனைத்து கலாமன்றங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர்சங்கங்கள், கமக்கார அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் உட்பட அனைத்து கழகங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் பனை, தென்னைவள அபிவிருத்தி சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் இணைந்து இந்த பெருவிழாவை சிறப்புற நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேசத்தின் கலை பண்பாட்டம்சங்களை பெருமைப்படுத்தும் விதமாக “புதுவையாள்” மலர் வெளியீட்டு நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. இருப்பினும் நீண்டகாலமாக இவ் மலர் வெளியீட்டுவிழா நடைபெறவில்லை. எனவே இம்முறை பண்பாட்டு பெருவிழாவுடன் மலர் வெளியீட்டை நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம் .

அத்துடன் விசேடமாக கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக கலைஞர் விருதுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அனைத்து கலைஞர்களும் நாளை 22ம் திகதி முதல்25ம் திகதிவரை விண்ணப்ப படிவங்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொண்டு தமது விண்ணப்பங்களை கையளிக்கமுடியும். ‌

விண்ணப்பங்கள் தொடர்பாக எதிர்வரும் 26ம் திகதி நாங்கள் இறுதி பட்டியலை வெளியிடவுள்ளோம் என தெரிவித்தார்.

Latest news

Related news