முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்ததது.
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் ஆசிரியர்களை இடமாற்றங்கள் மேற்கொண்டமை, அதிபரை ஒரு மாதகாலமாக நியமித்து தராமல் இழுத்தடிப்பு செய்து அதிபர் நேர்முக பரீட்சையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக ஆசிரியர் ஒருவரை குமுழமுனை மாகாவித்தியாலய பாடசாலைக்கு அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து குமுழமுனை மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (22.09.2025) காலை இடம்பெற்றிருந்தது.
போராட்டத்திற்கான மகஜரினை ஆளுநர், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் முல்லைத்தீவு, வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதுடன் ஆளுநருக்குரிய மகஜரினையும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான மகஜரும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் போராட்ட களத்தில் வைத்து கையளிக்கப்பட்டிருந்தது.
பாடசாலைக்கு வருகை தந்திருந்த முல்லை கோட்டக்கல்வி பணிப்பாளர் திருக்குமரன் அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது தாம் ஊடகங்களுக்கு கருத்து கூற முடியாதெனவும் வலயக்கல்வி பணிப்பாளரே கருத்து கூற முடியும் என தெரிவித்திருந்தார்.
குறித்த போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான வீ.கலைச்செல்வன், ஜெ.சிவசாந்தி , பெற்றோர் ஆசிரிய சங்கத்தினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.