முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை தேடும் நோக்கில் இன்று (14.11.2025) காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.ஹெச். மஹ்ரூஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.
விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தது.
நீதிமன்றத்தில் 10 அடி ஆழம் வரை அகழ்வதற்கு அனுமதி பெறப்பட்டு பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தது. குறித்த பகுதியில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பகுதியில் அருகாமையில் அகழ்ந்து பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு உரிய தரப்பினர் கோரிய நிலையில் பிறிதொரு நாளிற்கு அனுமதிக்கு கோருமாறு நீதிபதி கூறியிருந்ததுடன், குறித்த அகழ்வு இடம்பெற்ற பகுதியை மூடுமாறு நீதிபதி உத்தரவு வழங்கியதனையடுத்து மூடப்பட்டிருந்தது.
குறித்த தற்போது அகழ்வு இடம்பெற்ற பகுதியில் 2021 ம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டிருந்தது.
இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


