கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கிழக்கு அமெரிக்கா மொத்தமும் புகைமூட்டத்தால் அமிழ்ந்துள்ளது.
நியூயார்க் நகரம் மொத்தமாக
மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கனேடிய காட்டுத்தீயின் அபாயகரமான புகை அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது.
நியூயார்க் நகரம் மொத்தமாக புகைமூட்டத்தால் மூடியுள்ளது. மக்கள் மாஸ்க் அணிந்த நிலையில் வீதியில் வலம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நியூ ஜெர்சியின் நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதும் புறப்படுவதும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 84 நிமிடங்கள் வரையில் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவில் கியூபெக் பகுதியில் மட்டும் சுமார் 150 எண்ணிக்கையில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவில் 100 மில்லியன் மக்களுக்கு காற்று மாசு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் பலர் மாஸ்க் அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மூச்சில் புகையின் வாசம்
மூச்சில் புகையின் வாசம் உணர்வதாக பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நியூயார்க் நகரம் முழுவதும் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குறைந்தபட்சம் 10 பாடசாலை மாவட்டங்களில் மாணவர்களை வெளியே நடமாட விட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் புகைமூட்டத்தை சுவாசிப்பது என்பது 6 சிகரெட்டுகளை ஒன்றாக புகைப்பது போன்றது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே புதன் கிழமை நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் புகைமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.