கடந்த 11 மாத காலமாக சர்ச்சைக்கு உட்பட்டு வந்த இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் அனைவரினதும் இணக்கபாட்டுடன் இன்று வியாழக்கிழமை முடிவிற்கு வந்துள்ளதாக முன்னாள் தலைவர் யஸ்வர் உமர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மதிப்பிற்குரிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க அவர்கள் எமது நாட்டினதும், உதைபந்தாட்ட மேம்பாட்டினையும் கருத்திற்கொண்டு நீதியானதும், நோ்மையானதுமான இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன தேர்தலை நடாத்துவதற்கு சர்வதேச காற்பந்தாட்ட ( FIFA) வின் புதிய யாப்பின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று 10.08.2023 மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தனது அனுமதியை சமர்ப்பித்தார்.
இதன் பிரகாரம் இந்த நீதிமன்ற வழக்கில் ஆஜராகிய அனைத்து தரப்பினருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 16ம் திகதி இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தங்களை சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனமும் FIFA, இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனமும் ஒன்றாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இந்த தேர்தலின் பின்னர் எதிர்வரும் செப்ரெம்பர் இறுதி வாரத்தில் இலங்கைக்கு FIFA வால் விதிக்கப்பட்ட தடை நீங்கி இலங்கை தேசிய அணிக்கு உலககோப்பை தகுதிகான் போட்டிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கபெற இருக்கின்றன.
மேலும் இவ்விடயம் சம்பந்தமாக கருத்து தெரிவித்த முன்னாள் தலைவர் யஸ்வர் உமர் அவர்கள் கூறியதாவது இந்த வரலாற்று மிக்க அனுமதியை வழங்கிய விளையாட்டுதுறை அமைச்சருக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும், அனைத்து வழக்கறிஞ்ஞர்களுக்கும், என்னோடு பக்கபலமாக நின்ற பிரதேச காற்பந்தாட்ட சங்கங்களுக்கும் மற்றும் இதில் பங்கேற்ற அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்வதோடு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளோம். இந்த ஐக்கியத்தை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கும் ஒரு சிறிய குழுவின் முயற்சியை முறியடித்து அனைவரும் ஐக்கியமாக செயற்பட வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொண்டார்.