மலையக மக்களின் மாண்பை பாதுகாக்கும் 200 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பேரணியில் கலந்து கொண்டு மலையக மக்களுக்குத் தமது அமைப்பின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் முல்லைத்தீவு அலுவல உத்தியோகத்தர் ச.சர்மியா தெரிவித்தார்.
முன்னதாக “மாண்பு மிகு மலையகம் 200” ஐ அங்கீகரித்து, மலையக மக்களின் நினைவூட்டல் பேரணிக்கு ஆதரவு நல்குமாறு பேரணியின் ஏற்பாட்டுக் குழு பொதுமக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் ஆர்வக் குழுக்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
அதன் அடிப்படையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் த.கிருபாகரன் உட்பட அதன் செயற்பாட்டாளர்களும் அந்த அமைப்பின் இளையோர்களும் பேரணியில் பங்கு கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்களின் இருநூறு வருடத்தை அனுஷ்டிக்கும்முகமாக இப்பேரணி இடம்பெற்று வருகின்றது.
கடந்த 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பித்த இப்பேரணி சனிக்கிழமை 12.08.2023 இன்று மாத்தளை நகரில் முடிவடைகிறது.
“மலையக எழுச்சிப் பயணம்” என்பது சக சகோதர பிரசைகளுடனான ஓர் உரையாடலாகும் என்றும் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சக சகோதர பிரசைகள் மத்தியில் மலையகத் தமிழ் சமுதாயத்தின் வரலாறு, போராட்டங்கள், சாதனைகள், பங்களிப்பு, தற்போதைய சமூக பொருளாதார- அரசியல் அந்தஸ்து மற்றும் அபிலாஷைகள் ஆகியவை பற்றிய அடிப்படை மட்டத்திலான புரிதலை ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் இலக்காகும் என மலையக எழுச்சிப் பயண ஏற்பாட்டுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைக சமூகம் அனுபவித்த துன்பங்களையும், இந்த நாட்டில் சமமான குடிமக்கள் என்ற இடத்தைப் பெறுவதற்கான அவர்களின் போராட்டங்களையும் நினைவுகூருவதற்காகவும், அவர்களின் வரலாற்றையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அங்கீகரிப்பதற்காகவும். மலையக தமிழ் சமூகம் இலங்கை அரசாங்கத்திடம், இழப்பீடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இந்தப் பேரணி இடம்பெற்று வருகின்றது. மேலும் அவர்களின் கோரிக்கைகளாக
அவர்களின் வரலாறுகள், போராட்டங்கள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்தல்
● சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் தனித்துவமான சமூகம் மற்றும் அங்கத்தவர்களாக அங்கீகரித்தல்
● சமத்துவத்தை அடைவதற்கான கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை
● வாழ்க்கை ஊதியம், ஒழுக்கமான வேலைத்தரம், சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம்
● வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பான நிலத்துடன் கூடிய நிலம்
● தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து
● அரசாங்க சேவைகளுக்கு சமமான அணுகல்
● தோட்ட மனித குடியிருப்புகளை புதிய கிராமங்களாக எல்லை நிர்ணயித்தல்
வீட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு போன்றன கோரிக்கைகளாகும்.