முல்லைத்தீவில் மாடுகளுக்கும் காணிஇல்லை. மனிதர்களுக்கும் காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
அவரால் இன்று (26.08.2023) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்,
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு நிலம் இல்லை தொழில் முயற்சிக்கென இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் வீதம் தமக்கு காணிகள் தரும்படி 28626 பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டும் இன்று வரை அதற்கு சாதகமான பதில் இல்லை.
இந்த வாழ்வாதாரத்துக்கு உரிய கோரிக்கையை பிரதேச ரீதியாக அதிகாரிகளே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரியும் இன்றுவரை பயனில்லை.
மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பானது 2022ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி 2415 சதுரகிலோ மீற்றர் தரையாகவும், 202 சதுர கிலோ மீற்றர் உள்ளக நீர்ப்பிரதேசமாகவும் காணப்படுகின்றது.
இதில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வனஇலாகாவின் கட்டுப்பாட்டில் அல்லது ஆளுகைக்குள் மொத்த நிலப்பரப்பின் 36.72 வீதம் அதாவது 222006 ஏக்கர் நிலம் இருந்தது. யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு 2009ம் ஆண்டுக்கு பின்பு வனஇலாகா மேலும் 30.37 வீதம் 167484 ஏக்கர் நிலப்பரப்பை இணைத்துக்கொண்டது.
தற்போது காடுபேணல் சட்டத்தின்கீழ் ஒதுக்க காடுகளாக மீண்டும் 7.15 வீதமான நிலப்பரப்பை (42631 ஏக்கர்) கோரியுள்ளது. இதுவும் உள்வாங்கப்பட்டால் மொத்தமாக உள்ள மாவட்டத்தின் நிலப்பரப்பில் 74.24 வீதமான நிலங்கள் வன இலாகாவின் ஆளுகைக்குள் உள்வாங்கப்படும்.
இதைவிட மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனிய மணல் திணைக்களம், படையினர் என மிகுதி காணிகளில் பெரும் இத்திணைக்களங்களின் ஆளுகைக்குள் இருக்கின்றது.
வன இலாகாவின் பொறுப்பில் உள்ள நிலங்களில் மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைக்காக சுமார் 50000 ஏக்கர் காணி தேவையெனவும், விடுவித்து தரும்படியும் உரியவகையில் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்தும் இதுவரை சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் வேறு திணைக்களங்கள் கோரிக்கை, மற்றும் குடியேற்றங்களுக்கென கோரிக்கைவிடும் போது விட்டுக் கொடுக்கும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று வரை காணி இல்லாத குடும்பங்களாக 3389 குடும்பங்கள் காணப்படுகின்றது.
இது தவிர மாவட்டத்தில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தும் அதற்குரிய மேச்சல் தரைகள் தேவை என இடங்களை சுட்டிக்காட்டி கோரிக்கையை பல ஆண்டுகளாக விடுத்தும் இன்றுவரை கிடைக்கவில்லை முல்லைத்தீவில் தற்போது மாடுகளுக்கும் காணிஇல்லை, தமிழ் மனிதர்களுக்கும் காணி இல்லை என தெரிவித்துள்ளார்.