SENT OFF! The 1st ever red card in CPL history. Sunil Narine gets his marching orders 🚨 #CPL23 #SKNPvTKR #RedCard #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/YU1NqdOgEX
— CPL T20 (@CPL) August 28, 2023
சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதலாவது சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் வீரராக பதிவானார் மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சுனில் நரைன்.
மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் ரி 20 கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரிமியர் லீக்கின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் நேற்று(27) நடந்த போட்டியிலேயே சுனில் நரைன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வித்தியாசமான தண்டனை முறை
இந்த வருட கரீபியன் பிரிமியர் லீக் ரி20 போட்டியில், ஓவர்கள் மெதுவாக வீசுவதற்கு வித்தியாசமான தண்டனை முறைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
கரீபியன் பிரீமியர் லீக்கில் கொண்டுவரப்பட்ட புதிய விதி என்னவெனில், 18ஆவது ஓவருக்குள் நுழையும் பொழுது மெதுவாக பந்துவீசி இருந்தால், அந்த ஓவரின் போது வெளிவட்டத்தில் 4 களத்தடுப்பாளர்கள் மட்டுமே நிற்க முடியும். இதே 19 ஆவது ஓவர் என்றால், வெளிவட்டத்தில் மூன்று களத்தடுப்பாளர்கள் மட்டுமே நிற்க முடியும்.
ஆனால் இதே விதி 20 ஆவது ஓவருக்கு வித்தியாசமாக மாறுகிறது. அதாவது 20ஆவது ஓவரின் போது, குறித்த நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கப்பட்டிருக்காமல் இருந்தால், வெளிவட்டத்தில் மூன்று களத்தடுப்பாளர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுவார். மொத்தம் 10 பேரை வைத்து மட்டுமே விளையாட வேண்டும்.
காட்டப்பட்டது சிவப்பு அட்டை
நேற்று முதலில் பந்து வீசிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இருபதாவது ஓவரின் போது மெதுவாக பந்துவீசி இருந்தது. இதன் காரணமாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அப்பொழுது அணித்தலைவர் பொலாட் யாரையாவது வெளியேற்ற வேண்டி இருந்ததால், அவர் சுனில் நரைனை வெளியேற்றினார்.
இந்த வகையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் முதல் சிவப்பு அட்டை வாங்கிய அணியாக ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், தம் அணியிலிருந்து முதல்முறையாக ஒரு வீரரை சிவப்பு அட்டைக்காக வெளியேறிய அணித் தலைவராக பொலாட்டும், வெளியேறிய வீரராக சுனில் நரைனும் இடம்பிடித்துள்ளனர்.