குர்ந்தூர்மலை விடயத்தில் சட்டதரணிகளோடு இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளை இன்றையதினம் வழங்கப்பட்டிருந்தது.
வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
குருந்தூர் மலை விடயத்தில் நாம் 2018ஆம் ஆண்டு தொடக்கம் இதற்கான வழக்கை குருந்தூர் மலை தொடர்பாக முதன் முறையாக இரு பிக்குகளுடன் 12 நபர்களுக்கும், தாெல்லியல் நடவடிக்கைகள் என பாராது சட்டவிரோதமாக விகாரை அமைக்கும் கட்டுமான பொருட்கள்,புத்தர் சிலைகளுடன் வந்த போது குமுழமுனை தண்ணிமுறிப்பு ஆண்டான் குள மக்களும் இங்குள்ள அரசியல் பிரமுகர்களும் அங்கு சென்று மறித்திருந்தோம்.
அப்போது ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்ட வழக்கு இப்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. அந்த வழக்கிலே 2023ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 23ஆம் திகதி ஒரு காணி அபகரிப்பு நடவடிக்கையை தீர்ப்பதற்கு நாம் அங்கு சென்ற போது குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அங்கு கட்டுமான பணி நடைபெறுவதை அவதானிக்க முடிந்தது.
உடனடியாக நான் சட்டதரணிகளுடன் ஆலோசனையுடன் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து அந்த முறைப்பாட்டின் நிமித்தம் நீதி மன்றுக்கு வருகை தந்து வழக்கை தாக்கல் செய்தோம். அந்த வழக்கின் பெறுபேறே இன்று கிடைத்தது. இதைத்தவிர தொல்லியல் திணைக்களம், பொலிஸார் எங்கள் மீது போட்ட வழக்கு இரண்டு இருக்கின்றது.
அதைவிட புத்த பிக்குமார் தங்களுடைய நடவடிக்கைக்கு வழிபட விடவில்லை என ஒரு வழக்கு இருக்கின்றது. இன்றைய தீர்ப்பே வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக இருக்கின்றது. அனைத்து மாவட்ட சட்டதரணிகளும் இதற்கு பாடுபட்டார்கள், அரசியல்வாதிகள், மக்கள் அனைவரும் கோஷமிட்டு அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே நாம் இப்படி ஒரு நிலமைக்கு வந்துள்ளோம். தொடர்ச்சியாக நாம் சட்டதரணிகளோடு இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.