முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி பிரதேச செயலாளர் ஊடாக கலால் வரி திணைக்களத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டும் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குறித்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையம் ஒன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கிராம மக்கள் , பொது அமைப்புக்கள், பாடசாலை இணைந்து எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலாளருக்கும் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அதனை அகற்றி தருமாறு கோரி கடிதம் ஒன்றினை கடந்த மாதம் வழங்கியுள்ளார்கள்.
அதனையடுத்து அரசாங்க அதிபராலும், பிரதேச செயலாளராலும் மக்களால் வழங்கப்பட்ட எதிர்ப்பு கடிதங்கள் இணைக்கப்பட்ட கடிதம் இலங்கை மதுவரி திணைக்களத்தினருக்கு அனுப்பப்பட்டும் இது வரையில் குறித்த மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குறித்த கிராம மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.