முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே கடந்த 2023.06.29 அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து 2023.06.30 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டதோடு 2023.07.06 அன்று குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருந்தார்
இதனடிப்படையில் 2023.07.06 அன்று குறித்த பகுதியில் அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா அவர்களது தலைமையில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த இடத்திலே சுமார் 13 வரையான மனித எச்சங்கள் இனம் காணப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த புதைகுழி எவ்வளவு தூரம் இருக்கின்றது இதனை அகழ்வதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது தொடர்பிலும் இதனை தனியாக சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ள முடியாது என்கின்ற நிலையிலும் தொடர்ச்சியாக இந்த விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக 2023.07.13 அன்று முல்லைதீவு நீதிமன்றத்தில் விசேட கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
இந்த கூட்டத்தை தொடர்ந்து அகழ்வுப் பணிக்கான பாதீட்டுக்காக 20.07.2023 க்கு தவணையிடப்பட்டிருந்தது
இதனை தொடர்ந்து 20.07.2023 அன்று தொல்பொருள் திணைக்கள பாதீடு கிடைக்கப்பெறாத நிலையில் வழக்கு 08.08.2023 க்கு தவணையிடப்பட்டிருந்தது. 08.08.2023 அன்று வழக்கு விசாரணையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன்,யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் ஆகிய மூவர் கொண்ட குழாம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் குறித்த அகழ்வுப் பணியை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டதோடு அகழ்வுப்பணி தொடர்பில் 10.08.2023 க்கு தவணையிடப்பட்டது
10.08.2023 அன்று நீதிபதி த.பிரதீபன் தலமையில் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் செய்து அகழ்வுப்பணி ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு மீண்டும் 17.08.2023 க்கு தவணையிடப்பட்டது அன்றையதினம் தொல்பொருள் திணைக்கள பாதீடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தும் உரிய நிதி கிடைக்காததால் அகழ்வுப் பணிக்கு 31.08.2023 க்கு திகதியிடப்பட்டிருந்தது
31.08.2023 அனைத்து துறைசாந்தவர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற வழக்கு விசாரணையில் நிதி கிடைக்கப்பெற்றதாகவும் உரிய முன்னேற்பாடுகளை உரிய திணைக்களங்கள் செய்யுமாறும் இன்று (05.09.2023) அகழ்வுப்பணி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் கடந்த தினங்களில் நிலவிய காலநிலை சீரின்மை காணமாக இன்று (05.09.2023) காலை அகழ்வுக்கேற்ற உரிய முன்னேற்பாடுகள் நினைவடையாத நிலையில் குறித்த அகழ்வுப்பணி தொடர்பான AR /804/2023 எனும் வழக்கானது முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இன்று (05.09.2023) காலை எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று மாலை 3 மணிக்கு அனைவரும் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் செய்து அகழ்வு தொடர்பில் தீர்மானிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.