கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிலையான பாெருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவிகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் நோக்கோடு
கனடா செந்தில்குமரன் நிவாரணத்தின் நிதி பங்களிப்பில் 8,35,000 ரூபா பெறுமதியான நிலையான வாழ்வாதார உதவிகள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உதயநகர் கிளிநொச்சியில் மூன்று ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளி என்.சிறிபத்மநாதன் குடும்பத்தினருக்கு 2,55,000 பெறுமதியான அரிசி அரைக்கும் இயந்திரமும் , இரத்தினபுரம் பகுதியில் கடந்த ஐந்து வருடமாக இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருக்கும் சுப்ரமணியம் சிவகுமார் குடும்பத்தினருக்கு 3,20,000 பெறுமதியான எண்ணை ஊற்றும் இயந்திரமும், வட்டக்கச்சி பகுதியில் பிறப்பிலிருந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட சிறுமி மோகனாதாஸ் லுஜிதாவின் மருத்துவ செலவினை ஈடுசெய்ய 2,60,000 ரூபா பெறுமதியான பால் மாடு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
தாய் நாட்டில் வசிக்கும் நலிவுற்றவர்களின் துன்பங்களை தன் துன்பமாக நினைத்து அவர்களை துயரிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்க கனடாவில் இருக்கும் பாடகரான செந்தில் குமரன் நிவாரணம் எனும் இசை நிகழ்வுகளை தனது சொந்த செலவில் நடத்தி பாடல்களை பாடி அதன் ஊடாக பணத்தினை திரட்டியே குறித்த வாழ்வாதாரத்தினை வழங்கியுள்ளார். தனி ஒருவராய் இவர் எடுக்கும் முயற்சிக்கு கனடா மக்கள் பெரும் ஆதரவை வழங்குகின்றார்கள்.
இவர் கடந்த காலங்களில் 105 இதய சத்திர சிகிச்சைக்கு நிதிதிரட்டி உதவி வழங்கியுள்ளார். அத்துடன் முல்லைத்தீவு, மல்லாவி வைத்தியசாலைகளுக்கு இரத்த மாற்று சுத்திகரிப்பு நிலையத்தினையும் அமைத்து கொடுத்துள்ளார். அத்தோடு கிளிநொச்சியில் கடந்த ஏழு வருடமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு தாதியர்களை கொண்டு நேரடியாக சென்று மருத்துவ உதவிகளையும் வழங்கியுள்ளார். இவரினால் சமீபத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரால் முல்லைத்தீவில் இருதய நோய்பிரிவு ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.