முல்லைத்தீவில் நீதி கோரி கறுப்பு துணி கட்டியவாறு கண்டன போராட்டம்.

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம் நீதி அமைச்சின் செயலாளருக்கு கையளிக்க மகஜர் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறல் குடியேற்றம் மற்றும் நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் அத்தோடு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக கூறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிபதிக்காக நீதி கேட்கும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு என்ன நீதியோ? , நீதியின் கழுத்தில் தூக்கு கயிறு தீர்த்து போனதா நியாயத்தின் உணர்வு, நீயும் பெண்தானே நீதி கிடைக்காத பெண்களுள் நீயும் ஒருதியோ? நீதி தேவதையே, தொடர்ந்து நடந்தேறும் நீதி புரள்வுகளுக்கு என்ன தீர்ப்பு நீதி அமைச்சே? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மதகுருமார், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீஸ்வரன் , சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest news

Related news