முல்லைத்தீவு மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (01.11.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா அவர்கள் வெள்ளப்பெருக்கு, சூறாவளி, டெங்கு முதலான அனர்த்தங்களை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் உண்டாகும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதனைவிட அனர்த்தங்களின் போது மக்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய முன்னாயத்த நடவடிக்கைகள்,வீதிப்போக்குவரத்து மற்றும் வீதி விபத்து, பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் அனர்த்த குறைப்பு செயற்றிட்டம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன் , மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், நீர்பாசன திணைக்கள பொறியலாளர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சமாசங்களின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.