கரையொதுங்கிய கஞ்சா பார்சல். தீவிர விசாரணையில் பொலிஸார் (Video)

புதுமாத்தளன் கடற்கரையில் கஞ்சா பார்சலினை கைப்பற்றிய முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் பொதிகள் காணப்படுவதாக இன்று (07.11.2023) காலை 6.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடற்கரைக்கு சென்ற இராணுவத்தினர் கஞ்சா பொதிகளை கண்டிருந்தனர்.

இது தொடர்பாக இராணுவத்தினரால் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு பொலிஸார் குறித்த கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த தலா 22 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பார்சல்களை கைப்பற்றினர்.

இதுவரை 11 கஞ்சா பார்சல் கைப்பற்றப்பட்ட நிலையில் கடற்கரை பகுதி முழுவதும் மேலும் பார்சல் ஒதுங்கியுள்ளதா என்று சோதனை செய்ததுடன் மீனவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

Related news