2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மீனவர்களுக்கு இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை என முன்னாள் வட மகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு ஊர்வலத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது மீனவர்கள் கொக்கிளாய் தொடக்கம் பேய்ப்பாறைப்பிட்டி வரையான மீனவர்கள் கடலில் நல்ல எழுச்சியோடு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மிக கடுமையான முறையில் தென் இலங்கை சட்டவிரோத தொழில் செய்யும் மீனவர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் .

வடக்கு, கிழக்கு மாகாணத்தினை. எடுத்துக்கொண்டால் வவுனியா தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களும் கடல் பகுதியிலே இருக்கின்றன. வடக்கு, கிழக்கை மையமாக வைத்து கடல் வளங்களை சுரண்டி தென்னிலங்கை மீனவர்கள், சட்டவிரோத தொழில் செய்வதற்கு ஊக்குவிப்பு கொடுத்து அந்நிய நாட்டு மீன்பிடி படகுகள் வந்து இங்கே அட்டகாசமாக தங்களுடைய தொழில்களை செய்வதும், பிடிக்கப்படும் மீன்கள் அல்லது இறால்கள், எல்லாவற்றையும் திரும்பவும், எங்களுக்கு விற்பனை செய்வதும், சர்வதேச நாடுகளில் இருந்து மீனை இங்கே கொள்வனவு செய்வதும், என்ன கேவலமான ஒரு செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த கடல் எங்களுடைய இளைஞர்களின் பாதுகாப்பில் இருந்தது. அந்த நேரம் எவ்வளவு யுத்தம் நடந்து கொண்டிருந்தாலும், எங்களுடைய மீனவர்களுக்கான ஒரு பாதுகாப்பு இங்கே இருந்தது. அந்த பாதுகாப்பை வைத்துக் கொண்டு எங்களுடைய மீனவர்கள் சுதந்திரமாக கடலிலே மீன் பிடித்து வந்தார்கள். ஆழக்கடலெங்கும், மீன்பிடியை நடைமுறைக்கு ஏற்ப தொழிலை செய்து வந்தார்கள். எந்தவித சட்டவிரோத தொழில்களும் இல்லை. அந்நிய ஆதிக்கமும் இல்லை.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் எங்களுடையவர்களை மௌனிக்க செய்துவிட்டு அட்டகாசப்படுத்துகின்றார்கள், சட்ட விரோதிகள். அவர்களுக்கு துணையாக இலங்கை அரசாங்கம் துணையாக செயல்படுகின்றது .இதனால் எங்களுடைய மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அடி மடி இழுவை தொழில், சுருக்குவலை மூலம் மீன்பிடித்தல், வெடி பயன்பாட்டு முறை மூலம் மீன் பிடித்தல், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் என பல வித ரகங்களில் மீன் பிடிக்கின்றனர் சட்டவிரோத தொழில்களை செய்து கொண்டிருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். கடல் சூழலியலை சிதைப்பதனை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த மீனவர்களுடைய கோரிக்கை.

இந்த மீன்பிடி தொழிலை சரியாக செய்வதற்கு , சரியான முறையிலே நாங்கள் வாழ்வதற்கு, எங்களுடைய மீனவ குடும்பங்கள், வாழ்வாதார நிலைமைகளை, சீர்படுத்தவோ, எங்களுடைய இளைஞர் எழுச்சியாக, தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இந்த வாய்ப்பை இலங்கை அரசாங்கம். ஏற்படுத்தி தரவேண்டும்.

அரசாங்கமானது சீனாவுக்கும், இந்தியாவுக்கும், வேறு நாடுகளுக்கும், கடல்களை விற்றுக்கொண்டு, எங்களுடைய மீனவர்களை பட்டினி போடும் செயற்பாட்டை நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் விட்டால், எங்களுடையவர்கள் கொதித்து எழும் போது நீங்கள் தாக்கு பிடிக்க மாட்டீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Latest news

Related news