ஜனாதிபதி வெளியே ஒரு பேச்சு உள்ளே ஒரு நடவடிக்கையா? என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
இன்றையதினம் அவரது அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு அரிசி வழங்கி வைத்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 27 ஆம் திகதி மாவீரர்தினம் தொடர்பாகவும் சில கருத்துக்களை கூற விரும்புகின்றேன். நாட்டின் அரச தலைவர் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர எவ்வித தடையும் இல்லை என கூறியிருக்கின்றார்.
ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் நெருக்கடியான நிலை காணப்பட்டிருந்தது. துயிலும் இல்லங்களில் தங்களுடைய பணிகளை செய்து கொண்டிருந்த போது பொலிஸாரின் அடாவடி அதிகமாக இருந்தது.
அரச தலைவர் இவ்வாறு கூறிக்கொண்டு அவருக்கு கீழே கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற பொலிஸார் நேரடியாக தங்களுடைய அராஜகங்களை செய்தும் சில இடங்களில் இளைஞர்களை விரட்டியும் இருந்தார்கள் . இவ்வாறாகவே நினைவு நாளை நாம் அனுஷ்டிக்க கூடியதாக இருந்தது.
நீதிமன்ற கட்டளைகள் சிலருக்கு தரப்பட்டிருந்தது. அதன் பின்னர் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்து முல்லைத்தீவு நீதிமன்றில் சட்டத்தரணிகள் இணைந்து திருத்தப்பட்ட கட்டளையாக வழங்கப்பட்டிருந்தது.
இறந்தவர்களை நினைவில் கொள்வதற்கு தற்போதைய அரச தலைவர் கூட இப்படியான நெருக்கடிகளை ஏன் கட்டுப்படுத்த முடியாது. தனக்கு கீழ் அரசாங்கத்தில் இருக்கின்ற பொலிஸ் துறை எனில் வேறு அரசாங்கத்திற்கு கீழ் அல்லது வேறு துறைக்கு கீழ் இயங்குகின்றதா? என்ற கேள்வி தான் எங்களுக்குள்ளே எழுகின்றது.
என்னையும் , வீரசிங்கம் அவர்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இப்படியான அடாவடிக்கு மத்தியில் பெருந்திரளானவர்கள் வந்து உறவுகளை நினைவு கூர்ந்திருந்திருந்தார்கள்.
வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு நடவடிக்கையுமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தி கொண்டு அவரவர் உறவுகளை நினைவு கூரக்கூடிய வகையிலே அரச தலைவர் அக்கறை காட்ட வேண்டும் அல்லது அதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொருளாதார கஸ்ரத்திலும் வறுமைக்கோட்டிற்கு கீழுமே அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். அந்தவகையில் குறுங்கால வாழ்வியல் ஊக்குவிப்பாக 2014 ஆம் ஆண்டு தொடக்கம் அரிசி வழங்கும் செயற்திட்டத்தினை தொடர்ந்து செய்து வருகின்றேன்.
இன்றையதினம் 10 கிலோ அரிசி 44 பயனாளிகளுக்கும் இதுவரை 3578 குடும்பங்களுக்கும் வழங்கியிருக்கின்றேன். இன்றைய தினத்திற்கான நிதி உதவியினை திருமதி செல்வரட்ணம் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்.
என மேலும் தெரிவித்தார்.