மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்காவிட்டால் மாவட்ட செயலகம், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்பாக பாரிய போராட்டம் வெடிக்கும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்த பகுதியில் வாழும் மக்கள் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வன ஜீவராசிகள், வன இலாகா தொல்லியல், இல்மனைட், படையினர் இவ்வாறு நிலப்பரப்புக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் முல்லைத்தீவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 75 வீதமான காணிகள் வன இலாகாவிடமும், நந்திக்கடல், நாயாறு , சுண்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் கிட்டத்தட்ட 12 வீதமான காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அபகரித்து எங்களை குறுகிய இடத்திற்குள் குடியிருப்பு காணிகளுக்குள் மட்டும் இருக்குமளவிற்கு செய்தால் நாங்கள் என்ன செய்வது.
உழைப்பிற்காக , வாழ்வாதாரத்திற்காக எங்கே போவது, பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பது இவ்வாறு மோசமான திட்டத்தினை திணைக்களங்களின் ஊடாக தமிழர்களுடைய நிலங்களை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு இனவாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வன இலாகா திணைக்களத்திடம் இருந்த காணிகள் 2,22,006 ஏக்கர். ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் முழுவதையும் எடுத்து 4,35,000 ஏக்கர் காணியை வன இலாகா வைத்திருக்கின்றது என்றால் எங்களுடைய காணிகளை காத்தது யார்.? விடுதலைப் புலிகள் தான் எங்களுடைய காணிகளை காத்து மக்களுக்காக நின்றவர்கள் என்பது இதனூடாக தெரியும்.
அப்போது இளைஞர்கள், யுவதிகள் நிலங்களை பாதுகாத்து வாழ்வாதாரத்திற்கு வழி சமைத்தார்களே தவிர அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. ஆகவே பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் திணைக்களங்களாக இந்த திணைக்களங்களே காணப்படுகின்றன.
எங்களுடைய காணிகளை எங்களுக்கே வழங்க வேண்டும். வழங்காது விட்டால் மாவட்ட செயலகம், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்பாக மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தினை மேற்கொள்ளுவோம் என்பதனை தெரிவித்து கொள்ளுகின்றேன் என மேலும் தெரிவித்தார்.