புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆற்றல் கொண்டு மாற்றம் காண்போம் எனும் தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு இன்று (09) புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்குகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும்வகையில் குறித்த நிகழ்வு இன்று (09.12.2023) காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.சதாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் புதுக்குடியிருப்பு சந்திப்பகுதியில் இருந்து மலர்மாலை அணிவித்து விசேட தேவைக்குட்பட்ட இனிய வாழ்வு இல்ல சிறார்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ந.தசரதராஜகுமாரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிரிசாந்தன்,உள்ளிட்ட அதிதிகள் மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாற்றுத்திறனாளிகளது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பிரதம விருந்தினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்தினாளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Latest news

Related news