இனிவரும் காலங்களில் சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின், அலவ்வ பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இன்று (20) காலை சென்று இலங்கை பொலிஸ் சார்பில் ஒரு மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்கிய போது, பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதான ரொஷான் குமாரதிலக்க என்பவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததுடன், இறுதிக்கிரியைகள் நாளை (21) நடைபெறவுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் கான்ஸ்டபிளும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் நேற்று மாலை குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் லொறியொன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர். உத்தரவை மீறி பயணித்த அந்த லொறியை பின்தொடர்ந்த பொலிஸார் தம்பலஸ்ஸ பகுதியில் அதனை நிறுத்தியுள்ளனர். அத்துடன், லொறி சாரதியின் தலையில் கைத் துப்பாக்கியை வைத்த போது அது இயங்கியதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்