முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்றையதினம் அவரது வீட்டில் வைத்து தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28.01.2024) பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக இடம்பெற்றிருந்தது. அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.
குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார். இதனை அவதானித்ததாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த சிறுவனை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிறுவனது வீட்டிற்கு இன்றைய தினம் பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினர் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய குறித்த சிறுவனே சம்பவம் தொடர்பில் பாெலிஸாரினால் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.