தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு – 4 ஆம் திகதி அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு. அருட்தந்தை மா.சத்திவேல் 

தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றும் அரசு . எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

 

அவரால் இன்று (01.02.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் கடந்த 76 வருட காலமாக தமிழர்களின் அரசியல் உரிமைக்கான நீதியான கோரிக்கைகளை ஏற்காது தீர்வு என தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். தமிழர்களின் தாயகத்தை பல்வேறு வகைகளில் ஆக்கிரமித்து அவர்களை அவர்கள் சொந்த நிலத்திலேயே அன்னியர்கள் ஆக்கும் முயற்சியை தீவிரபடுத்தியும் உள்ளனர்.

 

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அரசியல் செயற்பாட்டாளர்களை எப்போதும் கைது செய்யும் நிலை தொடர்கின்றது. படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நிலமும், மக்களும் வைக்கப்பட்டுள்ளனர். யுத்த குற்றங்கள் மூடி மறைக்கப்படுகிறன. அதற்கான நீதியை சர்வதேசமும் காலம் தாழ்த்தி வருவது என்பது நீதியை கொலைக்கு உட்படுத்தும் செயலாகும். இவை எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் பெப்ரவரி 4 ம் திகதி வடகிழக்கு எங்கும் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி நடாத்தப்படவிருக்கும் அறவழிப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தனது பூரண ஆதரவை தெரிவிப்பதோடு சிவில் சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.

 

சுதந்திரம் கிடைத்ததாக பெருமிதம் கொண்ட ஆண்டின் முதலாவது நாடாளுமன்றிலேயே மலையக மக்களின் வாக்குரிமையை பறித்து அடுத்த ஆண்டில் குடியுரிமை சட்டம் கொண்டு வந்து அவர்களை அரசியல் அனாதைகளாக்கி மகிழ்ந்தனர். அதன் நீட்சியாக 1964 சினிமா- சாஸ்திரி ஒப்பந்த மூலம் அவர்களை ஆடு, மாடுகளாக சிதைத்து இன அழிப்பை மேற்கண்டவர்கள் கடந்த இருநூறு ஆண்டு காலமாக தொடர்ந்தும் அவர்களை கூலிகளாக பார்ப்பதோடு அவர்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய மலையகம் எனும் தேசத்திற்கு அவர்களை தூரமாக்கி நில உரிமை அற்றவர்களாக வைத்துள்ளதோடு அவர்களுக்கு எதிராக சலனமற்ற இன அழிப்பையும் முன்னெடுத்து வருகின்றனர்.

 

வடகிழக்கு தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைக்க பேரினவாத குடியேற்றத்தை 1940 களிலிருந்து விரிவுபடுத்தியவர்கள் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்தும் அரச பயங்கரவாதத்தின் ஆயுதமான படையினரின் துணையோடும், மதவாத காவி உடை தரித்தோரின் துணையோடு பலவந்தமாக பௌத்த மயமாக்கலையும் அரச தரப்பினர் மௌனமாக அங்கீகரித்து அதனை வேகப்படுத்திடவும் அனுமதித்துள்ளனர்.

 

வடக்கில் சமூக புதைகுழிகள் பல கண்டுபிடிக்கப்பட்ட போதும் அவை எழுப்பும் குரலுக்கு ஆட்சியாளர் செவிமடுக்க மறுக்கின்றனர். அவற்றுக்கான நீதியும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே கணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நிலையும் இன்று உள்ளது.

 

தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டு அரசியல் ரீதியில் அடக்குமுறை விரிவுபடுத்தப்பட்டபோது அதற்கு ஆதரவை தெரிவித்த தெற்கின் சமூகம் தற்போது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்தை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர உள்ள நிலையில் சுதந்திரம் பறிக்கப்படுவதாக இருளுக்குள் தள்ளப்படுவதாக குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

 

சுதந்திரம் என்பது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் தமக்கு மட்டும் சொந்தமாக்கி கொண்டுள்ளனர் என்பதை தெற்கில் சமூகம் தற்போதைய அரசியல் பொருளாதாரம் சமூக சூழ்நிலையில் உணரத் தொடங்கியுள்ளது அவர்களின் எதிர்காலம் இருளுக்கு செல்வதாக சிந்திக்க தொடங்கி உள்ளனர்.

 

இதனையே கடந்த 76 ஆண்டு காலமாக தமிழர்கள் உரத்து கூறி வந்திருக்கின்றார்கள். அதனை மீண்டும் அழுத்தி கூறுவதற்கு எதிர்வரும் 4 ம் திகதியை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி நடத்தப்படவருக்கும் அறவழி போராட்டம் தெற்கின் சமூகத்திற்கு விழிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்ப்போம். அவர்கள் விழித்துக் கொண்டு தமிழர்களோடு இணைந்தால் மட்டுமே அவர்களுக்கும் முழு நாட்டுக்கும் எதிர்காலம் உண்டு. சுபீட்சம் உண்டு என்றார்.

Latest news

Related news