தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் முகமாக முல்லைத்தீவில் வெள்ள நீர் முகாமைத்துவ செயற்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்திட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் இன்று(25) தொடங்கிவைக்கப்பட்டுள்ளது
இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் குறித்த திட்டத்திற்கான திட்டத்தின் பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு நீரை வெட்டி அகற்றும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தேராவில் குளத்து நீர் நிரம்பி மேலதிக நீரினால் குளத்திற்கு அருகில் இருந்த 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் இருந்துவரும் நிலையில் குறித்த திட்டத்தினால் இந்த மக்களது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவுள்ளது
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன்,லைக்கா ஞானம் அறக்கட்டளையின் உபதலைவரும் முன்னாள் அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம், கமநல சேவை திணைக்கள உதவிப்பணிப்பாளர் பரணிதரன்,அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சி.கோகுலராஜா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் க.அரங்கன் ,வனவளத்திணைக்கள அதிகாரிகள் கிராம சேவைளார்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.