உயிரிழை அமைப்பு மீது களங்கத்தை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை. உயிரிழை அமைப்பினர்.(Video)

உயிரிழை அமைப்பினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்கும் உயிரிழை அமைப்பினர் தெரிவித்தனர்.

உயிரிழை அமைப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் 6ஆம் மாதம் எமது அமைப்பிலிருந்து வெளியேறிய பயனாளிகள் எம் நிறுவனத்தின் மீது அவதூறான கருத்துக்கள் வெளியிட்டமையை தொடர்ந்து அது தொடர்பாக இன்றையதினம் ஊடக சந்திப்பினை உயிரிழை அமைப்பினர் மேற்கொண்டு கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உயிரிழை அமைப்பில் இருந்து வெளியேறிய 37 பயனாளிகள் உயிரிழை அமைப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கிளிநொச்சியில் கடந்த 6ஆம் மாதம் ஊடக சந்திப்பினை நிகழ்த்தி உயிரிழை நிர்வாகத்தினர் நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் உயிரிழை அமைப்பினர் கருத்து தெரிவிக்கும் போது உயிரிழை மீது பரப்பப்பட்ட அநாவசியமான செய்திகளை நம்பி உயிரிழை பயனாளிகளை கைவிட கூடியளவிற்கான அவதூறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளது. கணக்கறிக்கை ஊடாக உண்மையினை வெளிக்கொண்டு வருகி்ன்றோம்.

உயிரிழை பண்ணை மீது, ஆடு, மாடு, கோழி கொள்வனவில் நிதி மோசடி என குற்றம் சுமத்தியிருந்தார்கள். ஆனால் நாம் செய்த ஆய்வின்படி எல்லாமே சரியாக இருக்கின்றது. பண்ணை செயற்திட்டம் செய்த அமைப்பின் மீதும் அவதூறு சுமத்தியிருந்தார்கள்.

கடந்த 6ம் மாதம் 8ம் திகதி உயிரிழையில் விஷேட கூட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அப்போது உப தலைவராக இருந்த பிரபாவின் மீது எமது பயனாளிகள் அவரது நடாத்தை, செயற்பாடுகள் முரணாக இருந்தமையால் அவரை வெளியேற்றும்போது அவர் கொஞ்ச உறுப்பினர்கள் சிலரை வைத்து புதிய நிறுவனம் உருவாக்கவே எமது பயனாளிகளை பிரித்து சென்றுள்ளார்.

எமது அமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற நிதிகள் கையாளப்பட்ட முறைகள் மோசடி என கூறியிருந்தனர். கணக்காய்வு அறிக்கையின்படி மோசடி இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது அமைப்பில் கடந்தகால நிர்வாகம் செய்த தவறுகள் என கூறப்பட்டிருந்தது. கடந்தகால நிர்வாகத்தில் எமக்கு இருந்த தலைவர் உட்பட நிர்வாகத்தினரால் பன்றி பண்ணைக்கு என வரப்பட்ட பணத்தினை முன்னாள் தலைவர் கோணேஸ் அவர்களுடைய கணக்கிற்கு மாற்றப்பட்டது. அது தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல நிர்வாகம் சேர்ந்து நிர்வாகத்திற்கு bright future international னால் அனுப்பப்பட்ட மெயிலுக்கு அமைவாக மாற்றப்பட்டிருந்தது.

ஆனால் மாற்றப்பட்ட நிதியானது 4 ஆம் மாதம் 7 ஆம் திகதி எமது கணக்கிலக்கத்திற்கு வட்டியுடன் வைக்கப்பட்டுள்ளது. அதனால் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என கூறமுடியாது.

முதன்முதலில் வவுனியாவிற்கு பதிவு செய்ய செல்லும் பாேது மாவட்ட ரீதியாக 112 பேர் அதன் தொடர்ச்சியாக 250 பேர் பயனாளிகளாக இருந்து தற்பாேது 199 பேர் இருக்கிறார்கள். மிகுதியானோர் வருத்தங்கள், அழுத்த புண்கள் காரணமாக இறந்துவிட்டார்கள்.

அடுத்து அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பணியாளர் சம்பளம் இவ்வாறு அவர்கள் கூறுவது முரணான கருத்து. இவர்கள் கடந்த காலத்தில் எமது அமைப்பில் இருந்த பணியாளர்கள் மீதுதான் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்கள். எமது தற்போதுள்ள நிர்வாகத்தின் மீது முரண்பட்டதற்கு காரணம் கணக்கறிக்கையை நிவர்த்தி செய்யவில்லை என வெளியே சென்று கூறியுள்ளார்கள். ஆனால் இவர்கள் நிர்வாக தெரிவின் காரணமாகவே நிர்வாகத்தில் இருந்து விலகியிருக்கின்றார்கள்.

இவர்கள் எமக்கு விலகல் கடிதத்தினை தந்ததன் பின் நாம் அவர்களது ஆவணங்களை பெறும்படி கடிதத்தினை அனுப்பியுள்ளாேம்.இந்த ஊடக சந்திப்பின் பின்னர் எமது நிறுவனம் மீது, எமது அங்கத்தவர்கள் மீது ஏதாவது முரணான கருத்துக்கள் வெளிவருமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

புலம்பெயர் தேசத்தில் இருக்கும் எம் உறவுகளுக்கு நாம் கூற இருப்பது நாங்கள் இவர்களை உயிரிழையில் இருந்து வெளியேற்றி விடவில்லை. சில புலம்பெயர் தேசத்தில் உள்ள சில நபர்கள் இவர்களை குழப்பி உயிரிழையை இரண்டாக பிரித்து தாங்கள் புதிய அமைப்பினை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பிரிந்து சென்று அவ்வாறு செயற்படுகின்றார்கள்.

புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களுக்கு அன்பான கோரிக்கை நாங்கள் எப்போதும் ஒரு உயிரிழையாகவே வடக்கு கிழக்காக இணைந்து பயணிப்போம். நீங்களும் எங்களுக்கு முழுமையான ஆதரவினை தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

குறித்த ஊடக சந்திப்பின் போது உயிரிழை அமைப்பின் தலைவர் செல்வரத்தினம் ஆனந்தன், செயலாளர் தியாகராசா அழகநாதன், பொருளாளர் சீவரத்தினம் கவிதா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இணைந்து ஊடக சந்திப்பினை நிகழ்த்தியிருந்தார்கள்.

Latest news

Related news