முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சிவில் உடை தரித்த பொலிஸ் புலனாய்வாளர் போராட்டகாரரினை அருகே சென்று புகைப்படம் எடுத்த போது இவ்விடத்தே என்ன வேலை இவ்விடத்திலிருந்து செல்லுமாறு கூறி துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை இராணுவத்தினர், பொலிஸார் , சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் போன்றோர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று போராட்டத்தில் பங்கேற்றவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சிவில் உடை தரித்த பொலிஸ் புலனாய்வாளரை துரத்திய போது மீண்டும் வீதியோரத்தில் நின்று புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக செய்யப்பட்டிருந்தார்.