புதுக்குடியிருப்பு கைவேலி பாடசாலையில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் இன்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் கடந்த மாதம் 16 ஆம் திகதி 4 மின் விசிறிகள் களவாடப்பட்டிருந்தது. அதனையடுத்து பாடசாலை சமூகத்தினரால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து இன்றையதினம் (10.09.2024) திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைவேலி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பாடசாலை மின்விசிறிகளை களவாடிய நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் மின்விசிறிகளை களவாடி இருநபர்களுக்கு தலா 3000 ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து மின்விசிறிகளை வாங்கிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் நாளையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
களவாடிய குறித்த சந்தேகநபர் பொருட்களை விற்று அதிலிருக்கும் பணத்தினை போதை பொருளுக்கு பயன்படுத்தி வந்தமையும் குறிப்பிடதக்கது.