இம்முறை பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வீட்டில் போட்டியிடவில்லை, அனைவரும் புதியவர்கள். அவர்களுடன் ஏதும் கருத்து முரண்பாடுகள் அல்லது உங்களுக்கு பொருத்தமற்றவர்கள் என கருதுபவர்கள் யாருமிருந்தால் அவ்வாறான பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி தமிழனாக வீட்டுக்கே வாக்களியுங்கள் என ஆசிரியர் திருமகன் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பொதுவாக ஒருவர் புதிய கடை ஒன்று திறந்து விட்டால் எல்லோரும் ஓடி சென்று அந்த கடைக்குள் பொருட்களை கொள்வனவு செய்வார்கள். அது வழமை, அதே போன்று தான் இப்போது எங்களில் சிலர் திசை காட்டிக் கடைக்குள் முண்டியடிக்கின்றனர்.
அவர்கள் ஊழல், மோசடி இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை கொண்டு வரப் போகிறோம் என்கிறார்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தமிழர்களுக்கு இருக்கின்ற விசேடமான பிரச்சனை இனப் பிரச்சனைக்கான தீர்வு பெற வேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி பரிகாரம் வழங்க வேண்டும் என்பதாகும்.
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இந்த தேசிய மக்கள் சக்தி என்ன செய்யப் போகின்றது தேசிய இன பிரச்சனைகளுக்கு அவர்களிடம் என்ன தீர்வு இருக்கின்றது என்பது பற்றி ஆராய வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், 13-வது அரசியல் யாப்பு திருத்தம் பற்றியோ, அதிகாரப் பகிர்வு பற்றியோ, பொலிஸ் காணி அதிகாரம் வழங்குவது பற்றியோ தாம் அக்கறை கொள்ளவில்லை என்பதனை குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த கட்சிக்கு அளிக்கின்ற வாக்கு என்பது வன்னியில் சிங்களப் பிரதிநிதித்துவத்தை மிக நீண்ட காலத்தின் பின் உருவாக்குவதுடன் வன்னியில் தமிழர்கள் ஏமாற்றப்படுகின்ற ஓர் நிலைக்குத் தள்ளப்படும்
டெலிபோன் சின்னத்திற்கும், கங்காரு சின்னத்திற்கும் அளிக்கப்படும் தமிழர்களின் வாக்குகளின் மூலமாக ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது, அதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லை, அவர்களுக்கு முஸ்லீம் மக்களின் வாக்குகளே போதுமானது. எனவே நாம் சொல்லக் கூடியது அந்த கட்சிக்கு வாக்களித்தால் எமது தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தேசியம் மற்றும் அபிவிருத்தி பேசும் எம்மவர்களில் பலர் தாம் வடகிழக்கை பாதுகாக்கின்றோம், வடகிழக்கை மீட்போம் என்கின்றனர். எனினும் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தம்மையும், தமது குடும்பங்களையும் வளப்படுத்தியது மட்டுமன்றி மதுபானசாலை அனுமதி, எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதி என எமது மக்களை ஈடு வைத்து வயிறு வளர்த்ததே நிதர்சனம். அவர்களிடம் அபிவிருத்தி பற்றிய எதுவித சிந்தனையும் எள்ளளவேனும் இல்லை.
இந்த சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் பற்றிக் கூறத் தேவையில்லை, எமது மக்கள் அவர்களின் கடந்த காலம் பற்றி நன்கு அறிவர்.
உங்களிடம் கூறக் கூடியது தமிழரசு கட்சி என்பது தமிழ் தேசியத்திற்காக போராடுகின்ற தாய்க் கட்சி, தமிழர்களின் ஒற்றுமைக்காக பாடுபடுகின்ற கட்சி. இது எமது மக்களின் கட்சி எனினும் இதிலும் சில பொருத்தமற்ற நபர்கள் இருக்கின்றனர், அவர்களை இம்முறை தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். தேர்தலின் பின்னர் சகல குளறுபடிகளும் தீர்க்கப்படும் என்பதனை இந்த இடத்தில் உறுதியுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
தமிழ் தேசிய தரப்பில் இன்று ஒரு உறுதியான பாதையில் செல்லக் கூடிய கட்சி தமிழரசு கட்சி என்பதனை மக்கள் ஒருபோதும் மறந்து விடக் கூடாது. எனவே தமிழரசு கட்சி தொடர்பில் தவறான கருத்துக்களை கூறுபவர்கள் இந்த தேர்தல் மூலமாக ஒரு பாடத்தை கற்றுக் கொள்வார்கள்.
குறிப்பாக வன்னியில், ஆரம்பத்தில் தமிழரசு கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் என்று சொல்லப்பட்டது, ஆனால் இப்போது மூன்று என்று பேசப்படுகின்றது எனவே தமிழரசு கட்சியின் மீது வன்னி மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.
நான்காவது ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் உங்களது கட்சி என்று சொல்லப்படுகின்ற இலங்கைத் தமிழரசு கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும். நீங்கள் ஒரு தடவை தவறவிட்டால் ஐந்து வருடங்கள் உங்கள் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது.
அதுபோல் சிலரால் எமது மக்களுக்கு வழங்குவதற்கு என 5000 ரூபாய் போலி நாணயங்கள் அச்சடிக்கப் பட்டிருக்கின்றது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இந்த போலி நாணயங்களால் நீங்கள் சிறை செல்ல வேண்டியும் ஏற்படலாம்.
எனவே சிந்தித்து தமிழர் என்ற உணர்வுடன், ஓர்மமாக வீட்டுக்கு நேரே ஒரு புள்ளடியையும் எனது விருப்பு இலக்கமாகிய 2 க்கு நேரேயும் ஒரு புள்ளடியிட்டு அதிகூடிய விருப்பு வாக்கில் வன்னி மண்ணிலிருந்து பாராளுமன்றம் செல்ல உதவுமாறு உங்களிடம் உரிமையுடன் கேட்டு நிற்கின்றேன். எனத் தெரிவித்தார்.