நித்திரை கொள்ளும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டாம்: தமிழரசுக் கட்சி வன்னி வேட்பாளர் கலைத்தேவன் 

கொழும்பில் இருந்து கொண்டு மைக்கைகாதிலே போட்டுக்கொண்டு நித்திரை கொள்கின்ற உறுப்பினர்களை இத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டாம் என வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பா.கலைத்தேவன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னியில் தற்போது ஏற்ப்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை பல்வேறு கட்சிகளின் பால் எமது மக்களை ஈர்த்துள்ளது. பெரிய பணமுதலைகள் தமிழரசுக்கட்சியின் வாக்குக்களை சிதறடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனவே மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு கிராம அபிவிருத்தி சங்க தலைவரை தெரிவு செய்யும் போது அவர் நல்ல ஆளுமை உள்ளவரா என்று பார்க்கின்றோம். ஆனால் பாராளுமன்ற தேர்தல் என்பது எமது மாவட்டத்திற்கான பிரதிநிதிகளை அனுப்பும் தேர்தலாகும். மக்களின் பிரச்சனைகளை சரி செய்யக் கூடிய ஒருவராக அவர் இருக்க வேண்டும்.

கொழும்பிலே போய் இருந்து கொண்டு மைக்கை காதிலே போட்டுக்கொண்டு நித்திரை கொள்கின்ற உறுப்பினர்களை தயவு செய்து தெரிவு செய்ய வேண்டாம் என தமிழ் மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழரசுக் கட்சியானது பாரம்பரிய கட்சி. எமது இனத்தின் தனித்துவத்தை புறம்தள்ளி இலங்கை அரசியலை ஒரு போதும் செய்யமுடியாது. எனவே இந்த தேர்தலில் ஆற்றல் உள்ள ஊழல் செய்யாத புதியவர்களை தெரிவு செய்யவேண்டும்.

எனவே எமது வீட்டுசின்னத்திற்கு வாக்களித்து எனது வெற்றி இலக்கமான 7க்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Latest news

Related news