முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக பறங்கி ஆறு பெருக்கெடுத்துள்ளது. இதனால் முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிறாட்டிகுளம் கிராமத்திற்குச் செல்லும் வீதியை மூடி பறங்கிஆற்று நீர் பாய்வதனால் சிராட்டிகுளம் கிராமம் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், பறங்கியாற்றின் நீர்வரத்து அதிகரிக்குமிடத்து சிராட்டிகுளம் கிராமத்துக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்படும்.
இந் நிலையில் 23.11.2024 இன்று குறித்த பகுதிக்கு களவிஜயமொன்றை மேற்கொண்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள சிறாட்டிகுளம் கிராமமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
குறிப்பாக பறங்கியாறு பெருக்கெடுத்துள்ளதால் பறங்கியாற்றுப் பாலத்திலிருந்து சிறாட்டிகுளம் கிராமம்வரை சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்களின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இவ்வாறு பறங்கியாறு பெருக்கெடுத்துப்பாய்வதனால் சிறாட்டிகுளத்திலிருந்து நட்டாங்கண்டல் பாடசாலைக்கு கல்விகற்பதற்காக செல்லும் மாணவர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை குருதிமாற்று சிகிச்சை பெற்றுவரும் சிறிநீரக நோயாளர்களும், ஏனைய மருத்துவசேவைகளைப் பெறச் செல்பவர்களும் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு சிறாட்டிகுளம் கிராம மக்களின் அன்றாட செயற்பாடுகளும் இதனால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்றதுடன், சிறாட்டிகுளம் கிராமமும் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்த நிலமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சிறாட்டிகுளம் மக்களிடம் கேட்டறிந்ததுடன், இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும், மந்தைகிழக்கு பிரதேசசெயலாளருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
மேலும் சிராட்டிகுளம் வீதியை சீரமைப்புச் செய்துதருமாறு இதன்போது சிராட்டிகுளம் கிராம மக்களால் நடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.