முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார்.
குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின்போது இந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்ததால், குறித்த சிராட்டிகுளம் கிராமம் தனிமைப்பட்டிருந்தது. இதனால் குறித்த கிராமமக்கள் பெருத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துவந்திருந்தனர்.
இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கிராமத்திற்கு நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார்.
இதன்போது சிராட்டிகுளம் கிராமத்திற்குச்செல்லும் பிரதான வீதிச்சீரமைப்பு, நெல் உலரவிடும் தளம் அமைத்தல், யானைவேலி அமைத்தல், சிராட்டிகுளம் மாதிரிக் கிராமத்தில் தாழ்நிலப் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமையால் மக்கள் எநிர்நோக்கும் பிரச்சினைகள், பொதுப் போக்குவரத்துப் பிரச்சினை, வனவளத் திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
அந்தவகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைக்கடிதங்களை தனித்தனியே தன்னிடம் கையளிக்குமாறு தெரிவித்ததுடன், உரிய தரப்பினருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த மக்கள் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்களான யோகானந்தராசா, உதயகுமார் ஆகியோரும் நடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.