முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றையதினம் (28.12.2024) இரவு சிறப்பாக இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறந்த மற்றும் திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து, தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் அவர்கள் பிரபலமடைய வழிவகுப்பதனை முதன்மையான இலட்சியமாக கொண்ட இப் போட்டி மாவட்ட அளவில் முதன்முறையாக நடைபெறும் பிரமாண்டமான முன்னெடுப்பாகும்.
முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 6 அணிகள் குறித்த ஏலத்தில் பங்கேற்றிருந்தன. ஒவ்வொரு அணிக்கும் 15,000 புள்ளிகள் வழங்கப்பட்டு, குறைந்தது 15 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்னும் விதிமுறையிலே ஏலம் நடைபெற்றிருந்தது.
முல்லை பிரீமியர் லீக் போட்டியில் குருந்தூர் அணியினை இ.கவாஸ்கரும், முல்லை டைமன் அணியினை கெ.கஜேந்திரனும், புதுவை புயல்கள் அணியினை கெ.ஜனீந்திரகாந்தும், முல்லை வாரியர்ஸ் அணியினை எம்.நிஷாக்கும், முல்லைஅக்னி அணியினை எஸ்.நிமாகரனும், முல்லை ஏர்ஜன்சுப்பர்வோய்ஸ் அணியினை கெ.நிஷாந்தனும் அணிகளின் உரிமையாளர்களாக தங்களை முன்னிறுத்தி வீரர்களை முன்னோக்கி நகர்த்த தங்கள் அணிக்காக வீரர்களை போட்டியிட்டு தேர்வு செய்திருந்தனர்.
முல்லை பிரீமியர் லீக் (MPL) போட்டிகள் 2025 ஜனவரி 18 ஆம் திகதி மிகச் சிறப்பாக மாமூலை சுதன் சுதனா விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் இதன் இறுதி போட்டியானது பெப்ரவரி மாதம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்திலும் இடம்பெறவுள்ளது. கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இடம்பெறவுள்ளது.